கொம்பன், மருது, போன்ற கிராம கதை அம்சங்களை கொண்ட ஹிட் படங்கள் கொடுத்து வரும் இயக்குனர் முத்தையா, தொடர்ந்து கிராம கதையை மையப்படுத்தி, குறிப்பாக தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையின் சாயலில் திரைப்படமாக எடுத்து வருகின்றவர். முத்தையா எடுத்த அனைத்து படங்களும் கிராமத்து கதை அம்சம் கொண்டவை தான்.
இயக்குனர் முத்தையா தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளத்துடன் படம் எடுத்து வருகிறார் என்கின்ற விமர்சனமும் உண்டு. இயக்குனர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்திக் கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு வெளியான கொம்பன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் கார்த்திக் உடன் இணைந்து முத்தையா கூட்டணியில் விருமன் படம் வெளியாகிறது.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியானது.கார்த்திக் மற்றும் முத்தையா இருவரும் மீண்டும் இணைவதால் விருமன் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் விருமன் படத்தின் ட்ரைய்லர். ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் வெளியான கொம்பன், மருது போன்ற படங்களில் இடம்பெற்ற காட்சிகள் போன்றே மீண்டும் விருமன் படத்தின் ட்ரைலரில் இடம்பெற்று இருந்ததை பார்க்க முடிந்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஏற்கனவே பழைய பாடல்களில் இருந்து உருவி எடுக்கப்பட்ட மெட்டுக்கள் போன்று அமைத்திருந்தது. இப்படி ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் தன்னை அடைத்து கொண்டு அரைச்ச மாவை திரும்ப திரும்ப விருமன் படத்தில் அரைத்துள்ளார் முத்தையா. இந்த நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்ற மதுரைவீரன் பாடலை முதலில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியது பிரபல நாட்டுப்புற பாடகியும், விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி.
ராஜலட்சுமி குரலில் மதுரை வீரன் பாடல் ரெகார்டிங் முடிந்த பின்பு. இதே பாடலை இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் குரலில் மீண்டும் ரெகார்ட் செய்யப்பட்டு, பின்பு ராஜலக்ஷ்மி குரல் நீக்கப்பட்டு, அதிதி சங்கர் குரலில் மதுரை வீரன் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் சங்கரை சந்தோஷப் படுத்துவதற்காக, அவருடைய மகளை தன்னுடைய படத்தில் நடிப்பு மட்டுமின்றி பாடல் பாட வைத்து முத்தையா முன்னிலைப்படுத்தியுள்ளார்.
ஆனால், இதற்காக ராஜலட்சுமியை பாட வைத்து பின்பு அவர் குரலை நீக்கியது, ஒரு நாட்டுப்புற பாடகியை அவமானப்படுத்தும் செயல். அதிதி சங்கரை வைத்து பாட வைக்க வேண்டும் என்றால், முன்பே ராஜலட்சுமியை தவிர்த்து இருக்க வேண்டும். ஆனால் ராஜலட்சுமி அழைத்து அவருடைய குரலில் ரெகார்டிங் செய்து, பின்பு நீக்கியுள்ளது அவரை அவமானப்படுத்தும் செயல், இதனால் ராஜலக்ஷ்மி கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.