தமிழனை பெருமை படுத்தவில்லை என்றாலும் கூட பரவாயில்லை.. மணி சார் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளது. ஆசியா கண்டத்தையே ஆண்ட சோழ மன்னர்களின் வரலாற்று கதை என்பதால் ஒவ்வொரு தமிழர்கள் மத்தியிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.

ஒவ்வொரு தமிழனும் தவறாமல் பார்த்தே ஆக வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களும் பார்த்து வெற்றி பெறச் செய்து இயக்குனர் மணிரத்தினம் மற்றும் அந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு பல கோடி வசூலை வாரி அள்ளிக் கொடுத்தனர்.

முதல் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு அறிமுகம் போன்று இருந்ததால், பொன்னின் செல்வன் பாகம் இரண்டில் தான் சோழ மன்னர்கள் பற்றிய முக்கிய வரலாற்று சிறப்புமிக்க காட்சிகள் இடம் பெறும் என்கின்ற ஆர்வம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பக்கத்தின் மீது இருந்தது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் இடம்பெற்ற நந்தினி மற்றும் நந்தினியின் தாயார் மாதாகினி போன்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே கல்கியின் கற்பனையே.

அப்படி இருக்கையில் மணிரத்தினம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படம் எடுத்து இருந்தாலும் கூட அவர் மேலும் சோழ மன்னர்கள் வரலாற்று பற்றி ஒரு ஆராய்ச்சியை இந்த படம் எடுப்பதற்கு முன்பு செய்திருக்க வேண்டும். அப்படி செய்த பின்பு கல்கியின் நாவலில் இருந்த கற்பனை பாத்திரங்களை நீக்கிவிட்டு உண்மை வரலாற்றின் அடிப்படையில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த பொன்னியின் செல்வன் படத்தை திரையில் கொண்டு வந்து தமிழனை பெருமை அடையச் செய்திருக்க வேண்டும் மணிரத்தினம்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கற்பனை பாத்திரத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து, சோழ மன்னர்களின் வரலாற்றை தவறாக சித்தரிக்கும் நோக்கில் இந்த பொன்னியின் செல்வன் படம் வெளியாகி உள்ளது. மன்னர்களின் வீரத்திற்கு பறைசாற்றும் விதத்தில் எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்கள் இருக்க, அதை மையப்படுத்தி படம் எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் பெண் மீது கொண்ட காதலால், பெண் மீது கொண்ட மோகத்தால் மன்னர்கள் பல்வேறு சதிகளுக்கு உள்ளானார்கள் என்பதை சித்தரிப்பது போன்று அமைந்துள்ளது பொன்னியின் செல்வன் படம். இதில் உச்சகட்டம் என்னவென்றால் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனின் மரணம் என்பது மர்மமாக முடித்து இருப்பார் கல்கி.

ஆனால் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ஆதித்த கரிகாலனை கொலை செய்ய முயற்சிப்பதும், நந்தினி கொலை செய்யப் போகிறார் என்று தெரிந்தும் தன் காதலியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தன்னுடைய கத்தியை நந்தினி கையில் கொடுத்து, தன்னைத்தானே குத்தி ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொள்வது போன்று ஒரு காட்சியை வடிவமைத்துள்ளார் மணிரத்தினம்.

ஆதித்ய கரிகாலன் சாதாரண ஆள் கிடையாது அலெக்சாண்டர் போன்று ஒரு மாவீரன், அவன் உயிருடன் சில காலம் இருந்தாலே இந்த உலகையே வென்றிருப்பான். அந்த அளவுக்கு போர்க்களத்தில் வல்லமை படைத்தவன் ஆதித்ய கரிகாலன். அப்படிப்பட்ட ஒரு ஒரு வீரம் செழிந்த ஒரு தமிழன், ஒரு பெண் மீது கொண்ட காதலால் அந்தப் பெண்ணின் ஆசைக்காக தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்வது போன்று மணிரத்தினம் காட்சி அமைத்துள்ளது தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது ஒரு ஃபேன் இந்தியா படம் என்பதால் பிற மொழியிலும் வெளியாகி மற்ற மொழி பேசுகின்றவர்கள், ஓ.. இது தான் தமிழனின் வரலாறா.? என்று நினைக்க மாட்டார்களா.? அந்த வகையில் வரலாற்று படம் எடுத்து தமிழனை தலை நிமிர செய்ய வைக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, இது போன்று வரலாற்றை தவறாக சித்தரித்து தமிழ் மன்னர்களை சிறுமை படுத்தியுள்ள மணிரத்தினத்தை வரலாறு மன்னிக்காது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.