தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா அவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார்.
1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்த அவர், இதுவரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள்.
இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர், இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருதையும்’, நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும்’, மூன்று முறை ‘கேரள அரசின் விருதையும்’, நான்கு முறை ‘நந்தி விருதையும்’, தமிழக அரசின் ‘கலைமாமணி விருதையும்’, ஆறு முறை ‘தமிழ்நாடு மாநில திரை விருதையும்’, ‘சங்கீத் நாடக அகாடெமி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று, இசையால் தமிழ் நெஞ்சங்களில் உதிரத்தில் கலந்து, நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
அதுவும் அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் ஸ்டுடியோ எதுவும் இல்லாத தருணத்திலேயே சொன்ன நேரத்திற்கு அனைவருக்கும் தரமான இசையை வழங்கி வந்தார். இவரிடம் சென்ற இயக்குனர்கள் ஒரே நாளில் ஐந்து பாட்டுகளையும் பெற்றதாகவும் கூறியுள்ளனர். ஆனால் இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு இயக்குநர்களுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவு மோதலையும் சந்தித்தவர். பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடனும் ஒருகட்டத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டார். பிறகு பாரதிராஜாவுடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்தாலும் பாலசந்தருடன் கடைசிவரை கருத்து வேறுபாடு தீரவே இல்லை என்று கூறப்படுகிறது. இளையராஜா கடைசிவரை பிரியாமல் பணியாற்றிய இயக்குநர்களில் ஒருவர்தான் பாலுமகேந்திரா.
இளையராஜா பொதுவாகவே எப்போதும் மிகவும் டென்ஷன் ஆக இருக்கக்கூடியவர். அண்ணன், தம்பி ,பிள்ளைகள், என யாரையும் குணம் அறிந்து பார்க்க மாட்டார். எதையும் அடுத்தவர்கள் மனம் புண்படாதபடி நாசுக்காக சொல்லிக் கூட புரிய விரும்ப மாட்டார். நேரடியாக போட்டு உடைக்கும் மனோபாவம் கொண்டவர். இப்படி பல விஷயங்களில் தன்னுடைய உடன் பிறந்த சகோதரரான கங்கை அமரனை மட்டம் தட்டி பேசியதும் நடத்தியதும் உண்டு. சினிமா வட்டாரத்தில் கூட… இவரிடம் மோது பலருக்கு மூக்கு உடைபட்ட சம்பவங்களும் உண்டு. சிலர் இதை வெளியே சொன்னாலும்… பலர் வெளிக்காட்டி கொண்டது இல்லை.
குறிப்பாக இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு முறை பிரச்சனை வந்தபோது கூட… கங்கை அமரன் தான் முன்னின்று அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார். அதேபோல் தன்னுடைய அண்ணனுக்காகவும் அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைகாகவும் பல விஷயங்களை கங்கையமரம் விட்டுக் கொடுத்துள்ளார். ஆனால் எதையுமே இளையராஜா புரிந்து கொள்ளாமல் தன்னுடைய தம்பி என்றும் பாராமல் ஒரு கட்டத்தில் அடிக்காத குறையாய்… அவரிடம் சண்டை போடு, திட்டி வெளியே அனுப்பி உள்ளார்.
இடையில் இருவரும் பேசிக்கொண்டதாகவும் ஆனால் மீண்டும் அவர்கள் பேசிக்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பவதாரிணியின் உயிரிழப்புக்குக்கூட கங்கை அமரன் வராததற்கு காரணம் அவரும் இளையராஜாவும் பேசிக்கொள்ளாததுதான் எனவும் ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இளையராஜா பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “உறவு என்று இளையராஜாவின் பக்கத்தில் இப்போதைக்கு யாரும் இல்லை. எனக்காவது என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் புண்ணியத்தில் நான் இன்று நலமாக இருக்கிறேன். ஆனால் இளையராஜாவோ அவரது மகன்களுடன் பேசிக்கொள்வதே இல்லை. பேரன் பேத்திகளோடு பேசுவார் அவ்வளவுதான். இருந்தாலும் அண்ணன்தானே என்று ஒரு நானே ஃபோன் செய்து, நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. இருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினேன்” என்றார்.