மஞ்சும்மல் பாய்ஸ் வேற லெவல்… படத்தின் முழு விமர்சனம் இது தான்..

0
Follow on Google News

சமீபகாலமாக, மலையாள சினிமாக்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதன் இயல்பான கதைக்களங்களும், வித்தியாசமான முயற்சிகளும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதுமே விரும்பி கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படமும் இணைந்துள்ளது. இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா உள்ளிட்ட பான் இந்தியா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

பல்வேறு குடும்பப் பின்னணிகளைக் கொண்ட 10-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ நண்பர்கள் குழு. இவர்கள் அனைவரும் கயிறு இழுத்தல் போட்டியில் அனுபவம் கொண்டவர்கள். கோவாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற இவர்களது கனவு கரைந்துபோக கொடைக்கானலுக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். ஒருவழியாக டிரைவருடன் சேர்த்து 11 பேர் ஒரு குவாலிஸ் காரில் இடித்துப்பிடித்து உட்கார்ந்து கொண்டு பழநி வழியாக கொடைக்கானல் செல்கின்றனர்.

அங்குள்ள லேக், பூங்கா, பைன் மரக்காடுகள், வியூ பாய்ண்ட் என எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து ஊருக்கு கிளம்புகின்றனர். அப்போது நண்பர்களில் ஒருவன் குணா குகையை நினைவுபடுத்த அதையும் பார்த்துவிட்டுச் செல்ல முடிவெடுக்கின்றனர். அங்கு வனத்துறை அனுமதித்த இடத்தைத் தாண்டி, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பயணித்து பரவசம் அடைகிறது மஞ்சுமல் பாய்ஸ் குழு.

அப்போது எதிர்பாராத விதமாக இக்குழுவைச் சேர்ந்த சுபாஷ் குகையின் பாறை இடுக்கில் உள்ள ஒரு 900 அடி பள்ளத்தில் விழுந்து விடுகிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பது படத்தின் திரைக்கதை. இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் அதிகம் கொண்டாட முக்கிய காரணம் ‘குணா’ படத்தில் இடம்பெற்றுள்ள குகைதான். தமிழகத்தில் பல மல்டிபிளக்ஸ்களில் இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த வருடத்தில் முதல் ரூ. 100 கோடி நெருங்கும் திரைப்படம் என இந்த படத்தை ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதல் பாதியில் நம்மை ஒரு சுற்றுலா செல்வதற்காக மகிழ்ச்சியோடு தயார்படுத்தும் இயக்குநர். இரண்டாம் பாதியில் எதிர்பாராத நேரத்தில் உருவாகும் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள தேவையான மன உறுதியைக் கற்றுத் தந்திருக்கிறார்.

படத்தில் பணியாற்றிய பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். ஸ்ரீநாத் பாஷி, சவுபின் ஷகிர் இருவரும் மீண்டும் ஒருமுறை தங்களது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சைஜு காலித்தின் கேமிராவும் அஜயன் சலிஷேரியின் கலை இயக்கமும் பிரமிக்கச் செய்கிறது. எது உண்மையான குகை எது செட் என தெரியாத அளவுக்கு இருவரும் உழைத்திருக்கின்றனர்.

சஷின் ஷியாமின் பின்னணி இசையும் விவேக் ஹர்ஷனின் கட்ஸும் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என்ற கார்டு உடன் தான் இந்தப்படமே தொடங்குகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது.

படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப்பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது. தமிழ் சினிமாவில், 500 கோடி பட்ஜெட், 1000 கோடி பட்ஜெட், நடிகருக்கு 100 கோடி சம்பளம் என தம்பட்டம் அடித்து வரும் படங்கள், உள்ளே பரத்தை குப்பையாக தான் இருக்கும், ஆனால் மஞ்சுமா பாய்ஸ் குறைந்த பட்ஜெட்டில் எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் வெளியாகி ஒரு மலையாள படம் தமிழில் சக்கை போடு போட்டு வருவது, நீங்கல்லாம் என்னய்யா படம் எடுக்கிறீர்கள் என தமிழ் சினிமாவை தலை குனிய வைத்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.