கோலிவுட் மட்டுமின்றி, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தன் அதிரடி இசையால் இசை ரசிகர்களை துள்ளிக் குதிக்கச் செய்து கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மேலும், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களிலும் இசையமைத்துக் கொடுக்கும் பணியில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.
ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பின்னணி இசை மற்றும் பாடல்களும் முக்கியம். அப்படி இருக்கையில், அனிருத் இசையில் வெளியாகும் அத்தனை படங்களும் அவரது மியூசிக்கால் வெற்றி பெற்று விடுகிறது. இதனாலேயே அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி, சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா,விக்ரம், விஜய், அஜித், கமல் மற்றும் ரஜினி வரை அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் அனிருத்.
ஆனால், அவர் இது வரை நடிகர் சிம்பு படத்திற்கு மட்டும் இசையமைத்துக் கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் STR48. இந்தப் படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத்திடம் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால், அனிருத், அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட் ஆகியிருப்பதால், மிகவும் பிஸியாக இருப்பதாகவும், சிம்பு படத்திற்கு இசையமைக்க முடியாது எனவும் கூறியிருக்கிறார். ஒருவேளை இசையமைத்தாலும் கூட படத்தின் பாடல்கள் வருவதற்கு கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகும் என்று சாக்குபோக்கு சொல்லி மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பல ஹீரோக்களுக்கும் இசையமைத்துக் கொடுத்த அனிருத், முதல்முறையாக நடிகர் சிம்புவுடன் இணையப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. முன்னதாக, ஒரு பேட்டியில் அனிருத், சிம்புவுடன் விரைவில் இணைந்து ஒரு படம் செய்வேன் எனவும் எங்களுடைய காம்போ பயங்கரமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
அவ்வாறு இருக்கையில், தற்போது அனிருத் STR48 திரைப்படத்திற்கு இசையமைக்க வில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் சிம்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம், சிம்புவின் படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்ததற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதுதான் பீப் சாங். ஆம், 2015இல் நடிகர் அனிருத் இசையமைப்பில் நடிகர் சிம்பு எழுதிப் பாடிய ‘பீப் சாங்” பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.
பல்வேறு கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலைக் கேட்ட மகளிர் அமைப்பினர், அந்த சமயத்தில் இருவரின் புகைப்படத்தையும் செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்திய சம்பவங்களும் உண்டு. மேலும், பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பீப் சாங்கை இணையத்தில் வெளியிட்டதற்காக அனிருத் மற்றும் சிம்பு ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு மாதர் சங்கம் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, சிம்புவின் வீட்டு முன்பு பல்வேறு மகளிர் அமைப்பினர் போராட்டங்களும் நடத்தினர்.
இருவரையும் கைது செய்யக்கோரி காவல்நிலையங்களில் புகார்கள் குவிந்ததையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பழைய பகையெல்லாம் மனசுல வச்சிட்டுதான் அனிருத் இப்படி சிம்பு படத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியானாலும், இந்த திரைப்படத்திற்கு எந்த இசையமைப்பாளர் இசையமைக்க போகிறார் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். காத்திருந்து பார்ப்போம் யார் அந்த இசையமைப்பாளர் என்று…