செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் 7 நாட்களில் 500 கோடி வசூலை தாண்டி உள்ளதாக ஒரு தரப்பினர் கிளப்பி விட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார்.
அதுமட்டுமின்றி லியோ திரைப்படம் என்ன தான் முதல் நாளில் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூலை முறியடித்து 148.5 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்பட்டாலும் அந்த படம் 1000 கோடி வசூல் செய்ய வாய்ப்பில்லை என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரே உண்மையை ஓபனாக சொல்லி உள்ளார். இந்தியாவில் லியோ திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் 150 கோடி வசூல் வரை பெற்றிருப்பதாகவும் கூறுகின்றனர்.
திங்கட்கிழமை ஆயுத பூஜை, செவ்வாய்க்கிழமை விஜயதசமி என பண்டிகை நாட்கள் தமிழ்நாட்டில் இருந்த நிலையில், லியோ படம் இங்கே நல்ல வசூலை ஈட்டியுள்ளது. ஆனால், வார நாட்களில் மற்ற இடங்களில் லியோ படத்தின் வசூல் அதிரடியாக குறைந்து விட்டது. இனி வரும் அடுத்தடுத்து நாட்களில் லியோ வசூல் பாதிக்கும் என்றும் அந்த வகையில் இனி லியோ 600 கோடி வசூலை அடைவதே சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
மேக்கிங் சிறப்பாக இருந்தாலும் லோகேஷ் கதையில் கோட்டைவிட்டதாக பலர் கூறி வருகின்றனர். பாடல்களும் மனதில் பதியும்படி இல்லாமல் வழக்கம் போன்ற அனிருத் ஸ்டைலிலே இருந்தது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என தகவல்கள் கூறுகிறது. இந்நிலையில் லியோ படத்தால் தியேட்டர்காரர்களுக்கு லாபமில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், லியோ படத்திற்கு இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு 80% ஷேர் பங்கீடு வாங்கி உள்ளார்கள். அதனால் படம் வசூல் எவ்வளவு ஈட்டினாலும் அதில் எங்களுக்கு லாபமே இல்லை. ஆனால், இதே படத்திற்கு கேரளா போன்ற வெளிமாநிலங்களில் 60% ஷேர் மட்டுமே வாங்கியுள்ளனர் இது எந்த விதத்தில் நியாயம்?
பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை விருப்பப்பட்டு போடவில்லை.அந்த அளவு அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்காரர்களையும் கசக்கிவிட்டார்கள். படம் வசூல் அதிகமா செஞ்சாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனம் இல்லை. இதனால் எங்களுக்கு நஷ்டமில்லை. அவங்க இவ்வளவு தொகை ஷேர் கேட்டால் மீத தொகை எங்களுடைய திரையரங்க பராமரிப்புக்கே பத்தாது.
இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால், இப்போ கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட கிடச்சிருக்காது. வேறு படம் இல்லாததால் தான் இதை திரையிட வேண்டிய கட்டாயத்தில் திரையிட்டோம்” எனவே லியோ படத்தால் எங்களுக்கு எந்த வித லாபமும் இல்லை திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் லியோ படத்திற்கு புக்கிங்கே இல்லை என்றும் தியேட்டர்கள் காத்து வாங்குவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் லியோ படம் 500 கோடி, 1000 கோடி என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் வடை சுட்டு வந்தாலும், லியோ படத்தை வெளியிட்ட திரையரங்க பராமரிப்புக்கே பத்தாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருவது, இதுக்கு மேல லியோ வசூல் சாதனை என உருட்ட முடியாத சூழலுக்கு விஜய் ரசிகர்களையும், லியோ படக்குழுவினரையும் தள்ளியுள்ளது.