இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார் மாரி செல்வராஜ். அதன் பிறகு பெரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் பிகே ரோஸி திரைப்பட விழாவில் சாதி படங்கள் குறித்து மாரி செல்வராஜ் ஆவேசமாக பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் வெளியிடப்பட்டது. இதில் மாமன்னன் படக்குழுவினர் கலந்து கொண்டு ரசிகர்களுடைய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்கள். அப்போது மாரி செல்வராஜ் பேசியதாவது, “என் வாழ்வை படைப்பாக முன்வைப்பேன். அது சக மனிதர்களுக்கு என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தப்போகிறது என்று தான் பார்ப்பேன்.
தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். ஆனால், தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையும் கதை தான். 10 பேரோட கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி பிசுங்கி காணாமல் போனவர்களுடைய கதையை தோண்டி எடுத்து அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது.
ஏன் நசுக்கப்பட்டு, பிதுக்கப்பட்டனும் என்ற கேள்வி சொல்லிக் கொண்டே இருக்கீங்க என்று கேட்பார்கள்? வேறு வழி இல்லை, என்னுடைய கதையை சொல்லும்போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருவருடைய கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்த கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால் அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கை தான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்வியை நான் கேட்டுக் கொண்டுதான் இருப்பேன் என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் மாரிசெல்வராஜிடம் கேள்வி கேட்டார், அதில் மாமன்னன் படத்தை இயக்கி மகுடம் சூட்டியிருக்கீங்க. உங்களுடைய படங்களில் கம்யூனிசம் பேசப்படுவது சிறப்பான விஷயம் தான். ஆனால், சாதீயம் ஏன் பூசப்படுது என ரசிகர் ஒருவர் கேட்க ஆரம்பத்திலேயே மாரி செல்வராஜ் கடுப்பாகி விட்டார்.
சாதி எங்கே தெரியுது மாமன்னன் படத்தில் என மாரி செல்வராஜ் கேட்க, பகத் ஃபாசிலை காட்டும் போதும் சரி, உதயநிதியை காட்டும் போது சரி, அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்கள் என்பதை தெளிவாக காட்டுறீங்களே எனக் கேட்க, நீங்களே ஒரு முன் முடிவுக்கு வந்த பின்னர் படத்தை பார்த்தால் அப்படித்தான் தெரியும். மீண்டும் படத்தை போய் பாருங்க என செம்ம டென்ஷன் ஆனார் மாரி செல்வராஜ்.
மற்றொரு ரசிகர், பன்றி மேய்க்கும் காட்சியை காட்டும் போது ரொம்ப பாசமா செல்லமா வளர்ப்பது போல காட்டுறீங்க, ஆனால், உண்மையாகவே பன்றி மேய்ப்பவர்கள் அப்படி பண்றது இல்லையே? எதை குறிக்க அதை அப்படி காட்டுனீங்கன்னு கேள்வி கேட்டதும், அப்செட்டான மாரி செல்வராஜ் இயக்குநரிடம் ஏன் இந்த கேள்வி எல்லாம் கேட்குறீங்க, உங்களிடமே கேட்டுக்கோங்க, உங்களுக்கு ஒன்றும் தோன்றும் படம் பார்த்த இன்னொருத்தருக்கு ஒன்று தோன்றும் அவரிடம் விவாதியுங்கள் என பதில் சொல்ல முடியாமல் திணறினார் மாரி செல்வராஜ்.