ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக மிக பெரிய சதி… திட்டமிட்டு உள்ளே புகுந்துள்ள கும்பல் யார் தெரியுமா.?

0
Follow on Google News

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த மிக பெரிய குளறுபடியால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் மட்டுமில்லை அவ்வழியாக சென்ற பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர், இதில் ஏ.ஆர்.ரகுமான் முக பெரிய முறைகேடு செய்துள்ளதாக நிகழ்ச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாக குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இசைஅமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவிக்கையில், ARR இசை நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நேர்ந்த சொல்லொணா இன்னல்கள் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருவது மகிழ்ச்சி. இது எதிர்காலத்துக்கானது. ஆனால், இயக்குநர் தங்கர் பச்சான் சொல்லியது போல “தனக்கென இடர் வரும்போது கிளர்ந்தெழுகிற மக்கள் இதே போல கொஞ்சம் பொதுநலப் பிரச்சனைகளுக்கும் போராடினால், அரசியல் கட்சிகளை மட்டும் நம்பியிராமல் மக்கள் சக்தி கொண்டே பலவற்றை மாற்ற முடியும்” என்று சொல்லியிருப்பது நல்ல பார்வை. நாம் இதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தப் பிரச்சனையில் குளிர் காய உள்ளே புகுந்திருக்கிற இரண்டு கூட்டங்கள்தான் சமூகத்துக்கு ஆபத்து. இவர்கள் பிரச்சனைக்கு உதவ வந்தவர்கள் அல்ல. தீ மூட்டி அதில் குளிர் காய வந்தவர்கள். ஒன்று யாரென்று எல்லாருக்கும் தெரியும். வேற யாரு.. ‘மூடர் கூடந்தான்”. நாட்டையே அழிக்கத் துணிந்தவர்கள், இதையெல்லாம் விட்டுவிடுவார்களா? ஊரு இரண்டு பட்டால்தான் இவர்களுக்குப் பிழைப்பு. அதனால் அவர்களைப் பற்றிப் பேசக்கூட வேண்டியதில்லை. இனங்கண்டு கொண்டால் போதும்.

இன்னொன்று எதிரணி ரசிகர்கள். ரஹ்மான் மேலுள்ள காழ்ப்பின் காரணமாக இதைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் இதைப் பெரிதாக்கி அதில் கொஞ்சம் இன்பம் காண்பவர்கள். இவர்கள் ரஹ்மானைப் பகையாக எண்ணினாலும், ரஹ்மானுக்குப் பகைவர் இல்லை. அவர் அதையெல்லாம் தாண்டி நேர்மறை எண்ணங்களோடு வாழ்பவர். அதனால் இவர்களையும் புறக்கணித்து, பிரச்சனையின் மூலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுதான் மக்களுக்கு நலன் பயக்கும்.

இந்த அற்ப செயல்பாடுகளால் உண்மையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தப்பித்துக்கொண்டு இருக்கின்றனர். அதுதான் வருத்தம். இத்தனைக் குழப்பங்களுக்கும் பதில் சொல்லவேண்டியவர் இருவர்.
ஒன்று, அந்த நிகழ்ச்சி மேலாளர்கள். அதாவது, ACTC நிறுவனம். இரண்டு, காவல் துறை.ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை சரியாகத் திட்டமிட்டு, நிர்மாணித்து, பணம் கொடுத்து வரும் பொதுமக்களுக்கு எல்லா வசதிகளையும், பாதுகாப்பையும் வழங்கவேண்டியது இவர்கள் இருவரின் பொறுப்பு.

இந்த நிகழ்ச்சியில் பல குளறுபடிகள் நிகழ்ந்திருக்கின்றன. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்கள் இந்தப் பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்து மறுநாள் காலையிலேயே அந்தத் திடலுக்கு நேரே சென்று தன் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். இரண்டு உயர் அதிகாரிகள் பதவிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், காவல் துறையின் தவறுகளைப் பற்றி ஏன் யாருமே பேசவில்லை? அதற்குக் காரணமே இந்த சமூகப் பெருச்சாளிகள்தான். பிரச்சனையை ரஹ்மான் மேல் மட்டுமே சாட்டி இதை நீர்க்கச் செய்கிறார்கள். இது இன்னமும் தொடர்ந்தால் இதே போலப் பிரச்சனைகள் பலமுறை நிகழும். மக்களின் மறதிதான் தெரிந்த கதையாயிற்றே! அந்த ACTC நிறுவனத்தின் மேல் ஏன் இன்னமும் யாரும் பொதுநல வழக்குத் தொடரவில்லை? அதற்குக் காரணமும் இந்தக் கூட்டங்கள்தான்.

மேடைக்கலைஞர் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். அதை, தானாகவே அன்றிரவே ரஹ்மான் செய்தார். அதையும் தாண்டி சில முயற்சிகள் எடுப்பதாக அறிவித்திருக்கிறார். இன்னமும், அவரைத் தாக்குவதையே நோக்கமாகக் கொண்டால் இந்த இடர்களுக்குக் காரணமானவர்கள் எந்தச் சேதமுமின்றித் தப்பித்து விடுவர். பொறுப்பற்றவரின் சூதுகளுக்கு இரையாகாதீர்.