பார்க்க சாதாரணமானவர்தான் ….ஆனால் அவருடைய பண்ணை வீடு பார்த்தால் மிரண்டு விடுவீர்கள்…

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது ஏழாவது சீசன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பிக் பாஸ் 7 தொடங்குவதற்கு முன்பே இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடக்கும் என்று கூறப்பட்டது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் பேராவலுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு துறையைச் சேர்ந்த நபர்கள் போட்டியாளர்களாக அழைத்து வரப்படுவார்கள். இந்த சீசனிலும் அதே போலத்தான் போட்டியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, விசித்ரா, மாயா கிருஷ்ணா, யுகேந்திரன் வாசுதேவன், ஐஸ்வர்யா, அனன்யா ராவ், வினுஷா தேவி, பூர்ணிமா ரவி, பவா செல்லதுரை, விக்ரம், நிக்சன், அக்‌ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், சரவணன், விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா என சுமார் பதினெட்டு போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்களில் பவா செல்லத்துரை என்பவர் ஒரு இலக்கியவாதி மற்றும் சிறந்த கதை சொல்லி ஆவார். இவருக்கு வயது 61 ஆகிறது. இவர் பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே நாமினேஷனில் இடம்பிடித்துள்ளார். மேலும், முதல் நாள் இரவே அவர் சொன்ன ஓட்டம் கதைக்கு சகப் போட்டியாளர்களை மட்டுமில்லாமல் பிக்பாஸ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. எக்கச்சக்கமான புத்தகங்களை எழுதியுள்ள பவா செல்லதுரை பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.

முதன்முதலில் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பூலோகம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் ஜோக்கர், சீதக்காதி, பேரன்பு, குடிமகன், சைக்கோ, வால்டர், நவரசா, ஜெய்பீம், வெந்து தணிந்தது காடு, ரெஜினா மற்றும் பரம்பொருள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஆன இயக்குனர் பாலு மகேந்திராவுடன் நட்பு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அதேபோல், முன்னணி இயக்குனர்களான பாலா, ஷங்கர், மிஷ்கின் என பலரும் இவருடன் நட்பு பாராட்டி வந்ததாக பவா தெரிவித்துள்ளார். சிறுகதை எழுத்தாளரான பவா செல்லத்துரையின் சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். இவரது மனைவி ஷைலஜா அவர்களுடன் இணைந்து திருவண்ணாமலையில் வம்சி புத்தக நிலையம் மற்றும் பதிப்பகம் நடத்தி வருகிறார். தமிழ்ப்பற்று மிகுந்த பவா செல்லதுரைக்கு திருவண்ணாமலையில் பத்தாயம் எனும் ஒரு பண்ணை வீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வீட்டிற்கு தான் சினிமா இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள் என பலரும் படையெடுத்து வருவார்களாம். அந்த பண்ணை வீட்டில் பலரும் வியக்கும் அளவிற்கு ஏராளமான கலைப்பொருட்கள் இருப்பதாக பவா செல்லதுரையே கூறியுள்ளார். குறிப்பாக, பரதேசி படத்தில் பாலா பயன்படுத்திய வண்டி உள்ளிட்ட பல அரிய கலை பொருட்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த பண்ணைவீடு வித்தியாசமான உணர்வைக் கொடுக்கும் என்பதாலேயே பல எழுத்தாளர்கள், இயக்குநர்கள் அங்கே வந்து தங்கி கதைகளை பேசி மகிழ்வார்கள் என பேட்டி ஒன்றில்பவா செல்லத்துரை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்க எளிமையான தோற்றத்தைக் கொண்ட பவா செல்லத்துரைக்கு எழுத்து மீது மட்டுமில்லாமல் விவாசாயம் மீதும் ஆர்வம் மிகுதியாம், அதனால் அவர் விவாசாயமும் செய்து வருகிறார். இவ்வாறு பன்முகத் திறமைகளைக் கொண்ட பவா செல்லத்துரையின் கதை சொல்லும் திறனைப் பார்த்து, “பவா செல்லதுரையின் எழுத்துக்களை விட அவரது கதை சொல்லல் சிறப்பானதாக உள்ளது” என்று மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா பாராட்டியுள்ளதாகவும் பவா செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

அந்த பண்ணை வீட்டிற்கு இயக்குனர் பாலு மகேந்திரா அடிக்கடி வந்து சென்றதாலேயே, அவரது சிஷ்யன் ஆன இயக்குனர் பாலாவும் இப்போது வரை பண்ணை வீட்டிற்கு வந்து செல்கிறாராம். அவர் மட்டுமின்றி, மிஷ்கின், நாசர், ஷங்கர் உள்ளிட்ட பலரும் பண்ணை வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள் என்று அவர் கூறுவது நம்மை வியப்பின் ஆழத்தில் தள்ளுகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்திருக்கும் பவா செல்லத்துரை சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இவ்வளவு நெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார் என்பது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவரது பண்ணையில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பது பற்றிய ஆர்வத்தையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.