அவர்கள் என்னானு கூட கேட்கல… மன்னிப்பை ஏற்று கொள்ள முடியாது… சித்தார்த் வேதனை..

0
Follow on Google News

நடிகர் சித்தார்த் நடித்த ‘சித்தா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை செய்து வருகிறது. இந்த படத்துடன் வெளியான ’சந்திரமுகி 2’ மற்றும் ’இறைவன்’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்களை விட சுமாரான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘சித்தா’ தான் வெற்றி படமாக ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற சித்தா, பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனிலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சித்தா, இதுவரை இரண்டு மடங்கு லாபம் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சித்தா திரைப்படம் முதல் 5 நாட்களில் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த வாரம் வெளியான படங்களில் சித்தா தான் ரசிகர்களின் வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ‘சித்தா’ பட ரிலீசுக்கு முன்பாக புரமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்தார் சித்தார்த். அந்த சமயத்தில் கன்னட அமைப்பினர் காவிரி நதி நீர் பிரச்சனை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சித்தார்த் அந்த புரமோஷன் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பினார்.

இந்த சம்பவம் கடும் சர்ச்சைகளை கிளப்பியதை தொடர்ந்து கன்னட மக்கள் சார்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் சித்தார்த்திடம் மன்னிப்பு கோரினார்கள்.தற்போது ‘சித்தா’ படம் வெற்றிகரமாக ஓடுவதை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினர். இதில் சித்தார்த் பங்கேற்று பெங்களூரில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.

அவர் பேசும்போது, “நான் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காவிரி பிரச்சினைக்காக கர்நாடகாவில் பந்த் நடக்கவில்லை. பந்த் இல்லாத நாளில்தான் அங்கு போய் பேசினேன். அடுத்த நாள்தான் பந்த் நடக்க இருந்தது. ‘சித்தா’ என்ற நல்ல படத்தை எடுத்து இருக்கிறோம். அங்கு நடந்த பிரச்சினை பற்றி பேசினால் கவனம் சிதறிவிடும் என்பதற்காகவே அமைதியாக இருந்தேன்.” என்றார்.

மேலும், “பிரகாஷ்ராஜ், சிவராஜ்குமார் ஆகியோர் மன்னிப்பு கேட்டனர். அவர்களுக்கு நன்றி. காவிரி பிரச்சினையில் இருக்கும் அரசியல் எனக்கு தெரியாது. அதுகுறித்து நான் பேசியதே இல்லை. நான் பணம் செலவு செய்து எடுத்த படத்தை விளம்பரப்படுத்தவே அங்கு சென்றேன். இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும், கலைஞர்களுக்கும் இதுபோல் நடக்கக்கூடாது” என்றார்.

அதுமட்டுமின்றி பேசிய நடிகர் சித்தார்த், “இது அருண்குமாரின் ‘சித்தா’. வெற்றி, தோல்வி என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யாமல் படத்தின் கதைக்கருவுக்காக எடுத்தோம். நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ‘சித்தா’ படம் அன்பு, குடும்பம், குழந்தைகள் வளர்ப்பில் உள்ள பொறுப்பு பற்றிய படம். குற்றம், தண்டனை சார்ந்த படம் கிடையாது. நடந்த ஒரு அனுபவத்தை வாழ்க்கையாக மாற்றி விடாதீர்கள் என சொல்லும் படம்.” என்று பேசியுள்ளார்.

“படக்குழுவினர் அனைவருடைய உழைப்பும் இப்போது பேசப்படுகிறது. படத்தில் நடித்துள்ள அந்த குழந்தைகள் தேவதைதான். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார்கள். ‘அஞ்சலி’ படத்தின் குழந்தைகள் போல இவர்கள் இயல்பாக நடித்துள்ளதாக மணிரத்னம் பாராட்டினார். உனக்குதான் பாடல் மறக்கமுடியாத ஒன்றாக விவேக் கொடுத்துள்ளார். சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி.

இந்த படம் 99% படங்கள் ஆண்களுக்காகதான் எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக இதைப் பெண்களுக்கான படம் என்று சொல்லவில்லை. மனிதநேயம் என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் படமும் உங்களுக்குப் புரியும். இந்தப் படம் பார்த்துவிட்டு இயக்குநர் சசி இரண்டு மணிநேரம் அழுது கொண்டே பேசினார். ஒரு நடிகனாக ‘சித்தா’ எனக்கு முக்கியமான படம். படத்தில் சிறப்பாக வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் நடிகர்களுக்கும் நன்றி!” என்றார்.