இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்களின் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருந்த போதிலும் சில விஷமிகளால் இசைக் கச்சேரிக்கு இடையூறு ஏற்பட்டு விட்டதாக நடிகை ரம்பாவின் கணவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசைக் கச்சேரியிலும் குளறுபடி ஏற்பட்டு பிரச்சனை மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்திருந்தது.
அண்மையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இசைக்கச்சேரியை நடத்தி இருந்தார். அதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் இதில் நடிகை தமன்னா ஆட்டத்தை அருகில் பார்க்க முண்டியடித்து கொண்டு ரசிகர்கள் மேடையை நோக்கி சென்றனர். இந்த கச்சேரியில் அலைமோதிக்கொண்டிருந்த ரசிகர்களின் கூட்டத்தால் திடீரென குளறுபடி ஏற்பட்டது. இதன் விளைவாக மேடையில் இருந்து வெகு தூரத்தில் இருந்து இலவசமாக பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், திடீரென பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களின் இடத்திற்குள் புகுந்து விட்டனர்.
இது காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய பார்வையாளர்களை ஆத்திரமடைய செய்தது. அந்த இடம் முழுவதும் பார்வையாளர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசலுடன் காட்சியளித்துள்ளது. இதை அடுத்து, நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீண்டும் சிறிது நேரம் கழித்து தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இசை நிகழ்ச்சிகள் திடீரென ஏற்பட்ட குளறுபடியால் பார்வையாளர்கள் கூட்டத்தின் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய பல பார்வையாளர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நடிகை ரம்பாவின் கணவரும் பிரபல தொழிலதிபருமான இந்திரநாத் பத்மநாதன், நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடித்த விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “ “சில விசமிகளால் இந்நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதற்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.
எனினும் பெருமளவு பாதிப்பு ஏற்படாது அனைவரையும் பாதுகாத்து இந்நிகழ்வு நிறைவடைந்ததற்கு எமது மக்களுக்கும் இறைவனுக்கும் நானும் எனது குடும்பத்தினரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் திருப்பிக்கொடுக்க முடிவு செய்துள்ளேன். தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை திரும்ப பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை – 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்.” என தெரிவித்துள்ளார்.