சென்னை : நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக மாறிவருவது தமிழ் திரையுலகம் ஒரு ஆரோக்கியமான திசையில் பயணித்துக்கொண்டிருப்பதையே இது உணர்த்துகிறது. பரோட்டா சூரி முதல் யோகி பாபு வரை திடீரென கதாநாயகனாக வளர்ந்து நிற்பது திரையுலகிற்கு பெருமைதரக்கூடிய ஒன்று.
இந்நிலையில் கூர்க்கா படத்தை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் மெடிக்கல் மிராக்கிள். இந்த திரைப்படத்தை ஏ1 புரொடக்சன்ஸ் தயாரித்து வருகிறது. ஜான்சன் கே என்பவர் இயக்கிவருகிறார். பொதுவாக க்ரைம் த்ரில்லர் ஆக்சன் குடும்பத்தை என ஓவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொருவகையான ரசிகர்கள் உண்டு.
ஆனால் காமெடி மட்டும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும். படத்தில் ஒரு சில காட்சிகள் காமெடியாக அமைப்பது என்பது எளிதான வேலை. ஆனால் படம் முழுக்கவே நகைச்சுவையை திகட்டாமலும் போரடிக்காமலும் கொடுப்பது என்பது மிகுந்த சிரமம். அதற்கென இயக்குனர்கள் கடினமாக உழைப்பதுண்டு.
இந்நிலையில் நடிகர் சந்தானத்தை வைத்து ஏ1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் என அடுத்தடுத்த ஹிட் காமெடி படங்களை கொடுத்த இயக்குனரான ஜான்சன் கே தனது அடுத்த திரைப்படத்தை யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து படம் இயக்கிவருகிறார்.இந்த படம் ஜான்சனின் முந்தைய திரைப்படங்கள் போல காமெடியில் கலக்கும் என படக்குழுவினர் கூறிவருகின்றனர்.
இந்த படத்தில் ஓலா நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஓட்டுநராக நடிக்க உள்ளார் யோகி பாபு. அவருக்கு ஜோடியாக இளம்நடிகையான தர்ஷா குப்தா நடிக்க உள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். அரசியல் கலந்த காமெடியாக உள்ள இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. படவெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.