விஜய்யை மதிக்க அவரது ரசிகர்கள்… இந்த ஸ்கூல் பசங்கள வெச்சுகிட்டு அய்யோ பாவம் விஜய்…

0
Follow on Google News

ஜூன் 22 நடிகர் விஜயின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக, சென்னை நீலாங்கரையில் விஜய் ரசிகர்கள் செய்த கூத்துதான் சிறுவன் ஒருவனின் உயிருக்கே ஆபத்தாக மாறி உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவரும் நடிகருமான விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியிருந்தார்.

அப்பொழுதே அவரிடம் இருந்து அறிவிப்பு ஒன்றும் வெளியானது. அதில் அவர் தெளிவாக, இந்த முறை ரசிகர்கள் என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது தமிழகம் முழுவதும் நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது.

விஜயின் வீடு அமைந்திருக்கும் சென்னை நீலாங்கரையிலேயே தளபதி மக்கள் இயக்கத்தின் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ.சி.ஆர் சரவணன் தலைமையில் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. அப்போது கராத்தே பயின்ற சிறுவன் ஓடு உடைக்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அந்த ஓடுகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பும் பற்றவைக்கப்பட்டது.

ஆனால் அதை உடைக்க முயன்ற சிறுவனின் கையில் நெருப்பு பற்றிக் கொண்டது. இதை பார்த்து பதறி அடித்து அங்கிருந்து விஜய் ரசிகர்கள் நெருப்பை அணைக்க முற்படும் போது தவறுதலாக எரியும் நெருப்பில் தண்ணீருக்கு பதில் மண்ணெண்ணையை ஊற்றி, அங்கிருந்த அத்தனை பேர் மீதும் நெருப்பு பற்றி கொண்டது. கேட்பதற்கு சினிமாவில் வரும் வடிவேல் காமெடியை போல வேடிக்கையாக இருந்தாலும் இந்த வேதனைக்குரிய சம்பவத்தால் பலருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இப்போது அந்த சிறுவனும் காயம் அடைந்த மற்றவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் அறிவுறுத்தியும் அவர் பேச்சைக் கேட்காது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், இப்படியான சம்பவம் அரங்கேறியது நடிகர் விஜய் தரப்பையும் வெறுப்படைய செய்துள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்தினால் தமிழக மக்கள் மனம் நொந்து இருக்கும் சூழலில் பிறந்தநாள் கொண்டாட்டம் என விஜய் ரசிகர்கள் ஆங்காங்கே இதுபோன்று கோலாகல நிகழ்ச்சியில் ஈடுபடுவதும் மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. நடிகர் விஜய் தனது ரசிகர்களை சினிமா மோகத்தில் இருந்து மீட்டெடுத்து இனிமேலாவது அரசியல் படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஒரு கட்சி என்றால் அந்த கட்சியின் தலைவனின் சொல்லுக்கு கட்டு படவேண்டும், ஆனால் விஜய் கட்சியில் இருக்கும் அவருடைய ரசிகர்கள், விஜயை ஒரு பொருட்டாகவே மதிக்கமால், விஜய் தன்னுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம், கள்ளகுறிஞ்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என விஜய் தெரிவித்தும், கூட அதையும் மீறி விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருவது, இந்த பால்வாடி பசங்களை வெச்சுகிட்டு தான் விஜய் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போகிறாரா என விமர்சனம் எழுந்துள்ளது.