லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்குப் பிறகு வாரிசு படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்தது என்னவோ லியோ குறித்து அப்டேட்களைத்தான். அந்த அளவுக்கு லோகேஷ் – விஜய் கூட்டணியின் மீது பெரும் ஹைப் உருவாகியிருந்தது. அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின்போது முன்கூட்டியே சில சர்ப்ரைஸ்களை படத்தில் பணியாற்றியவர்கள் போட்டு உடைத்துவிட்டதால் இந்த முறை படத்தின் தலைப்பை கூட படு சீக்ரெட்டாக வைத்திருந்தது படக்குழு.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பும் திரையரங்க நிர்வாகங்கள் பட தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட் பதிவுகளையே மிஞ்சும் விதமாக சமூக வலைதளங்களில் அலப்பறை செய்கின்றன. படத்தின் ட்ரெய்லருக்கு ஒரு டீசர், அந்த டீசருக்கு ஒரு க்ளிம்ப்ஸ், அந்த க்ளிம்ப்ஸுக்கு ஒரு அறிவிப்பு டீசர் என்று தயாரிப்பு நிறுவனங்களின் பாணியை பின்பற்றி, டிக்கெட் புக்கிங் திறப்புக்கு ஒரு அப்டேட், அந்த அப்டேட்டுக்கு ஒரு அப்டேட் என்று திரையரங்க நிர்வாகங்கள் செய்த கூத்தெல்லாம் நடந்ததை காணமுடிந்தது.
இது ஒருபுறமிருக்க, ’லியோ’ படத்தின் முதல் காட்சி 4 மணியா அல்லது 7 மணியா என்று குழப்பம் எழுந்த நிலையில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு தெளிப்படுத்தியிருந்தது. மேலும், லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும், கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 19.10.2023 அன்று அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு திரையிட அனுமதி கோரியும், 19.10.2023 முதல் 24.10.2023 வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகளை காலை 7 மணி முதல் திரையிட அனுமதி கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதி அனிதா சுமந்த் இந்த வழக்கை நாளை விசாரிக்கவுள்ளார்.
ஏற்கனவே விஜய் படத்தின் டீசர் வெளியான பொழுது ரோகிணி தியேட்டரை அடித்து நொறுக்கி தும்சம் செய்தனர் விஜய் ரசிகர்கள். பொதுவாகவே விஜய் படம் சிறப்பு காட்சி ரிலீஸ் செய்யப்படும் போதெல்லாம் பல பிரச்சனைகள் ஏற்படும். பலர் அடி தடி செய்து போக்குவரத்து நெரிசல்களையும் உருவாக்குகின்றனர். கடந்த முறை படத்தின் ஆடியோ லாஞ்சிங் போது ஏற்பட்ட பிரச்சனைகள் போலீசார் ரசிகர்களை லத்தியில் அடித்து அமைதி படுத்தினர். அதனாலேயே இந்த முறை ஆடியோ லான்ச் வைக்கவில்லை. இருப்பினும் சிறப்புக் காட்சி வைக்க தொடர்ந்து வழக்குகளை போட்டு வருகின்றனர். இதனால் விஜய்க்கு ரசிகர்கள் மீது அக்கறை இல்லையா என்று பலர் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
நிலைமை இப்படியிருக்க, மிக சுமாரான ஒலி-ஒளி தரம் கொண்ட திரையரங்குகளில் கூட ரூ.1200 முதல் ரூ.1500 வரை டிக்கெட் விற்கப்படுவதாகவும், பெரிய திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ.2000 முதல் ரூ.4000 வரை போகலாம் என்றும் வேதனையுடன் கூறுகின்றனர். அதிக விலைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகளை தமிழக அரசு கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.