இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சூர்யா மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் இயக்குனராக அமீருக்கு மட்டும் பெயரை வாங்கிக்கொடுக்காமல் சூர்யாவிற்கும் இளம் ரசிகர்களை சம்பாதித்து தந்தது.
மௌனம் பேசியதே படத்திற்கு பிறகு அமீர் ராம் என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார். ஜீவாவின் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவெடுத்தது. எப்படி மௌனம் பேசியதே படம் சூர்யாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்ததோ அதே போல ராம் படம் ஜீவாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இது படம் அல்ல ஒரு நாவல் என இப்படத்தை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.
கார்த்தியின் நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் மூலம் கார்த்தியை அறிமுகம் செய்தார் அமீர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் இப்படத்தை பற்றி பல சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கிறது. இப்படத்தின் போது இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே நடந்த பிரச்சனை தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். இந்நிலையில் இதனைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதில், அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே இருப்பது பண பிரச்சனை. ஆனால் அது தற்போது வேறு விதமாக சென்று கொண்டிருக்கிறது. ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டியில் அவருக்கு வேலை தெரியாது என்றெல்லாம் பேசி உள்ளார். அவ்வாறு பேச தேவையில்லை. பருத்திவீரன் படம் எடுக்க அமீருக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் தான் ஞானவேல் ராஜா கொடுத்தார். மீதி ஒரு கோடியே 65 லட்சம் பணத்தினை அமீர் கடனாக வாங்கி படம் எடுத்தார்.
ஆனால் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் ஸ்டுடியோ கிரீன் வழங்கும் பருத்தி வீரன் என்று தான் விளம்பரம் நடந்தது இதனால் கடுப்பான அமீர், சூரியா உள்ளிட்ட எல்லோருக்கும் போன் செய்து பாதியில் போய்விட்டு இப்போது ஏன் படத்துக்கு உரிமை கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டார். இதனைக் கேட்டு சூர்யா உடனே படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். வந்து அவர் கடனாக வாங்கிய அனைத்து பணத்தையும் வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக கூறினார்.
ஆனால் அமீரோ வட்டி வாங்குவது ஹலால் என்று கூறிவிட்டார். இதனால் அசலை திருப்பி தருவதாக சூர்யா கூறியுள்ளார். அவர் 30 லட்சம் பணத்தையும் கொடுத்தார். அதன் பின்பு திடீரென்று இந்த பிரச்சனையில் இருந்து சூர்யா விலகி விட்டார். மீதி பணத்தையும் தரவில்லை. சிறிது நாட்களுக்குப் பின்பு தன்னுடைய மேனேஜர் தங்கத்துரையை வைத்து கொடுத்த 30 லட்சத்தையும் திரும்பி கேட்க ஆரம்பித்து விட்டார் சூர்யா.
அமீர் சூர்யாவிடம் நேரடியாக பேச போன் செய்தாலும் தங்கதுரை பேச விடாமல் தொந்தரவு செய்து கொண்டே வந்துள்ளார். மேலும் பணத்தை திரும்பி கேட்க சூர்யா தான் கூறியதாகவும் கூறியுள்ளார். இதனால் கடுப்பான அமீர் இந்தப் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி விட்டார். கடைசி வரை அவருக்கு பணம் கொடுக்கவே இல்லை. மேலும் 50 லட்சம் தருகிறோம் மதுரை ஏரியா ரைட் சைடு தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மேலிடத்தில் பேசிவிட்டோம் ஒத்துக்கொள்ளுங்கள் என்று பருத்திவீரன் படத்தையும் எழுதி வாங்கியுள்ளார்கள்” என்று அந்தணன் பேசியுள்ளார்