திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை, மிகக்குறுகிய காலத்திலேயே, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி, 0% சேதாரம் என கவர்ச்சிகரமான விளம்பரத்தோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பிரணவ் ஜுவல்லர்ஸ்.
மேலும், பழைய நகைகளை அடகு கடையில் வைத்து ஏன் வட்டி கட்டுறீங்க? பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வந்து தாங்க, ஒரு வருடம் கழித்து, எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை அள்ளிட்டு போங்க என்றும் விளம்பரம் செய்தது பிரணவ் ஜூவல்லர்ஸ். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், பிரணவ் ஜூவல்லர்ஸ் பல்வேறு கிளைகளில் பணத்தைக் கட்டினர்.
பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு ஏகபோக வரவேற்பு ஏற்பட்டது. நிறைய பேர் நகை எடுக்க கூடினர். பழைய நகைகளை கொடுத்து டெபாசிட் செய்தனர். ஓராண்டு முடிந்த பிறகு புது நகைகளை வாங்கிச்செல்ல முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். ஆனால், பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை, தங்கள் கிளைகளை அடுத்தடுத்து இழுத்து மூடியது. இந்த நகை கடையின் கவர்ச்சியாக பிரபலம்படுத்த பிரகாஷ்ராஜ், வாணி போஜன் உட்பட இன்னும் சில பிரபலங்களை வைத்து விளம்பரம் எடுத்திருக்கிறார்கள்.
அதில் 0 சதவீதம் செய்கூலி, சேதாரம் கிடையாது. ஒரு கிராமுக்கு 4000 ரூபாய் சேமிக்கலாம், கல்யாணத்திற்கு தேவையான மொத்த நகையின் மூலம் ₹40,000 சேமிக்கலாம் என்றெல்லாம் பிரகாஷ்ராஜ் சொல்லி இருக்கிறார். இதை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து நகை எடுத்து இருந்தார்கள். இன்னும் சிலர் இந்த ஜுவல்லரியில் நகை சீட்டும் கட்டி வந்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரணவ் ஜுவல்லரி முதலாளிகள் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து தப்பித்து ஒடி இருக்கிறார்கள். இதை அறிந்த பொதுமக்கள் கடையின் முன்பு கண்ணீர் மல்க அழுது போராட்டம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தான் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் பிரகாஷ்ராஜை திட்டி தீர்த்து வருகின்றனர். இதையடுத்து, பிரணவ் ஜுவல்லரி மீது முதலீட்டாளர்கள் மோசடி புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், அக்டோபர் மாதம் பிரணவ் ஜுவல்லரி மீது லட்சக்கணக்கான மக்களை மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியது. நவம்பர் மாதத்தொடக்கத்தில், தலைமறைவான பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதன் மற்றும் அவரின் மனைவி கிருத்திகாவிற்கு பொருளாதார குற்றப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துகொண்டது.
தொடர்ந்து, நவம்பர் 20 ஆம் தேதி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் படி, அமலாக்கத்துறை பிரணவ் ஜுவல்லரிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையை மேற்கொண்டனர். அதில் 23.20 லட்சம் பணம் மற்றும் நகைகளை கைப்பற்றி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நகை குழுமம் செய்த 100 கோடி மோசடியில் பிரகாஷ்ராஜ்க்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே இந்த நகைக்கடைக்கு விளம்பர தூதராக இருந்த நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் அடுத்த வாரம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இதென்ன கொடுமை? நகை விளம்பரத்தில் நடித்து இப்படி மாட்டிக் கொண்டாரே? என்று ஒருசிலர் கேட்க, என்னங்க இது? பிரகாஷ் ராஜ் போன்ற பெரிய பிரபலங்கள் நடித்து ஈர்க்கப்பட்டதால் தானே பணம் போட்டோம் என வேறுசிலர் கொந்தளித்து வருகின்றனர். தற்போது பிரணவ் ஜுவல்லர்ஸ் கடையின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டு விட்டன. நகை, பணம் போட்டவர்கள் திண்டாட்டத்தில் இருக்கின்றனர். போலீசாரும், அமலாக்கத்துறையும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.