என்னாது இதுக்கு தான் மாரிமுத்து இறந்தாரா.? பயில்வானை வறுத்து எடுத்து மாரிமுத்து குடும்பத்தினர்..

0
Follow on Google News

நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பற்றி வாய்க்குவந்தவாறு பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இவரது நக்கலான பேச்சு மற்றும் வதந்திகள் பிரபலங்களை மட்டுமின்றி, ரசிகர்களையும் வெறுப்பேற்றி விடும். இவ்வாறு தினசரி ஒரு பிரபலத்தை வம்பிழுத்து வரும் பயில்வான் ரங்கநாதன், இப்போது மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்களையும் பற்றி ஏடாகூடமாக பேசி, மாரிமுத்துவின் வாரிசிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டார்.

எதிர்நீச்சல் என்ற ஒற்றை சீரியல் மூலம், கோடிக்கணக்கான மக்களின் கவனத்தைத் தன்வசம் ஈர்த்தார். கிராமம் முதல் நகரம் வரை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினரையும் தன் மிரட்டலான நடிப்பால் ஈர்த்துக் கொண்டார். இப்படி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நடிகர் மாரிமுத்து புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கையில், துரதிர்ஷ்டவசமாக அண்மையில் மாரடைப்பால் காலமானார். அவரது கம்பீரமான நடிப்பை தினசரி சீரியலில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்று வரை எதிர்நீச்சல் சீரியலைப் பார்க்கும் மக்கள் ஆதிகுணசேகரன் இல்லாமல் இருப்பது விடுதலாகவே உள்ளதாகக் கூறுகின்றனர்.

அந்தளவிற்கு மாரிமுத்துவின் நடிப்பினால் ஈர்க்கப்பட்ட ஏராளமான ரசிகர்களிடையே, மாரிமுத்துவின் இறப்பு குறித்து சம்பந்தமில்லாத விஷயங்களைக் கூறி பயில்வான் ரங்கநாதன் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். மேலும், பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சை பேச்சுக்கு மாரிமுத்துவின் மகன் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் மாரிமுத்து அவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோதிடர்கள் பற்றியும், ஜோதிடம் பற்றியும் தனது கருத்தை முன்வைத்திருந்தார்.

இதனால், ஜோதிடர்கள் மாரிமுத்துவுடன் விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிகழ்வு குறித்து பேசிய பயில்வான், நடிகர் மாரிமுத்து அவர்கள் ஜோதிடத்திற்கு எதிராகவும், கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும் பேசியதால்தான் இறந்து விட்டார் என்று பேசியிருக்கிறார். பயில்வான் ரங்கநாதனின் பேச்சு, ரசிகர்களை கொந்தளிக்கச் செய்தது. இதற்கிடையில், சமீபத்தில் மறைந்த மாரிமுத்துவின் புகழ் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

அதில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணிபுரிந்த சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது, நடிகர் மாரிமுத்துவின் மகன் பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். புகழ் அஞ்சலியின் போது, “என் அப்பா சாமி இல்லை என்று சொன்னதால்தான் இறந்துவிட்டார் என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன், அப்படியானால் அது போன்ற விவாதத்தில் பேச நானும் தயாராக இருக்கிறேன்” என்று மாரிமுத்துவின் மகன் சொல்லி இருக்கிறார்.

அதேபோல், மாரிமுத்துவின் தம்பி பேசிய போது, “இறந்த ஒருவரை பற்றி இதுபோன்று பேசுவது ரொம்பவே தவறு. காசுக்காக அவரைப் பற்றி பேசுவது, அவருடைய ஆத்மா அங்கு சுற்றுகிறது, இங்கு சுற்றுகிறது என யூடியூபில் வீடியோக்கள் போடுவது ரொம்பவே தவறு” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் விமலும், அந்த புகழ் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். விமலும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது தரப்பினை தெரிவித்துள்ளார்.

அதாவது, “மாரிமுத்து சாமி இல்லை என்று சொன்னாரே தவிர அவர் சம்பந்தப்பட்ட யாரையும் கோவிலுக்கு போகக்கூடாது, சாமி கும்பிட கூடாது என சொல்லவில்லை. மேலும் மறைந்த நடிகர் மயில்சாமி சதா காலமும் சிவன் கோவிலில் தான் இருப்பார். அப்படி சாமி கும்பிட்ட அவருக்கும் மரணம் தான் நேர்ந்தது. எனவே இது போன்ற பேசுவது தவறு ” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மாரிமுத்துவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே விமல் கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.