வெற்றிமாறன்-தனுஷ் என்ற வெற்றிக்கூட்டணியில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘வடசென்னை’. இப்படத்தின் கதை ரொம்பவும் நீளமாக இருப்பதால் ஒருபாகத்தில் கதையை சொல்லி முடிக்கமுடியாது என்பதற்காக, இப்படம் இரண்டு பாகமாக எடுக்கப்படும் என்று வெற்றிமாறன் முன்பே அறிவித்திருந்தார். முதல்பாகம் வெளியாகி வருடங்கள் பல கடந்தும் இரண்டாம் பாகம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகமலே இருந்தது.
இந்நிலையில்‘வடசென்னை’2ஆம் பாகம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அமீர் கொல்லப்படுவதாக காட்டியிருப்பார்கள். அதையொட்டிய வன்மம், துரோகம், கொலை என முதல்பாகம் சொல்லப்பட்டிருந்தாலும், இரண்டாம் பாகத்தில் ராஜனின் எழுச்சியைக் காட்டப்போவதாக வெற்றிமாறன் சொல்லியிருந்தார்.
அதாவது, ராஜனின் 15வயது முதல் 24 வயது வரையிலான கதையைச் சொல்லப்போகிறார்கள். இதற்காக ராஜனின் சிறுவயதில் நடிப்பதற்காக நடிகர் தேர்வு கடந்த சில மாதமாக நடைபெற்று வந்தது. இதில், கடைசியாக காமெடி நடிகர் கருணாஸின் மகன் கென், சிறுவயது ராஜனாக நடிக்க தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கென் ஏற்கெனவே, தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். ராஜன் கதாபாத்திரத்திற்கு கென் பொருத்தமாக இருப்பார் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர். மீண்டும், தனுஷ்-வெற்றிமாறன்-கென் கூட்டணி இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
வடசென்னை படம் வடசென்னையை சேர்ந்த இரு கேங்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் பகையை மையமாக வைத்து உருவான படம். தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர், டேனியல் பாலாஜி, பவன், ராதாரவி என பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய கேங்ஸ்டராக ராஜன் என்ற கதாபாத்திரத்தில் அமீர் மிரட்டியிருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஜன் கதாபாத்திரம் வருமா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு வெற்றிமாறன் கண்டிப்பாக இருக்கும் என்று ஒரு விருது வழங்கும் விழாவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.