சென்னை : நடிகர் மற்றும் பகுதிநேர அரசியல்வாதியான கமலஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுவருகிறது. இதன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் 300 கோடியை நெருங்கி வருகிறது.
இந்த திரைப்படத்தை கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்து மல்டி ஸ்டார் திரைப்படமாக அமைந்ததுடன் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் பிடித்த படமாக அமைந்திருந்தது. மேலும் இந்த படம் கமலஹாசனுக்கு சிறந்த கம்பேக் படமாகவும் அமைந்துள்ளது.
இந்த அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் அது வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக வதந்திகள் உலவின. முதல் பாகத்தை இயக்கிய கெளதம் மேனனே இயக்கப்போகிறார் எனவும் ஜோதிகா மீண்டும் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் தான் ஒரு புதுமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார். கமலஹாசன் நடித்து வெளிவந்திருந்த விஸ்வரூபம் திரைப்படத்தில் எடிட்டராக பணிபுரிந்தவர் மகேஷ் நாராயணன். இவர் மலையாளத்தில் மாலிக், சியூ சூன் மற்றும் டேக் ஆப் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மலையாள திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இவர் தான் கமலஹாசனின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். மேலும் அந்த படத்திற்கான திரைக்கதையை கமலஹாசனே எழுத உள்ளார். கமலஹாசன் தமிழ்திரையுலகத்திற்கு மகேஷ் நாராயணனை இயக்குனராக இந்த படத்தில் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.