5000 கிலோ மீட்டர் பைக் பயணம்: ரஷ்யாவில் கெத்து காட்டும் தல அஜித்

0
Follow on Google News

அஜித் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘வலிமை’. ‘நேர்கொண்ட
பார்வை’ படத்திற்கு பிறகு இயக்குனர் எச்.வினோத்துடன் கைகோர்த்திருக்கும்
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் இருந்து
வருகிறது.

2020ஆம் ஆண்டு தீபாவளிக்கே இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்,
கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதனால்
படத்தின் ரிலீஸும் தள்ளிப் போனது. இந்நிலையில், இப்படக்குழுவினர் இறுதிக்கட்ட
படப்பிடிப்பு நடத்துவற்காக சமீபத்தில் ரஷ்யாவுக்கு சென்றிருந்தனர்.

அங்கு, அஜித் பங்கேற்கும் பைக் சேஸிங் காட்சிகளை படமாக்கினர். இத்தோடு
இப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாகவும் படக்குழுவினர் அறிவித்தனர்.
படப்பிடிப்பு முடிந்த கையோடு படக்குழுவினர் அனைவரும் இந்தியா திரும்பிவிட்ட
நிலையில், அஜித் மட்டும் ரஷ்யாவில் தங்கியிருப்பதாக தற்போது தகவல்கள்
வெளியாகியுள்ளது.

அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கெனவே,
சென்னையிலிருந்து சிக்கிம் வரை சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கிலேயே
பயணம் செய்திருந்தார். இதே முயற்சியை ரஷ்யாவிலும் செய்ய அஜித்
ஆசைப்பட்டதாகவும் அதற்கான முயற்சியிலும் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவில் இருக்கும் பைக் பிரியர்களை அஜித் சந்தித்து அவர்களுடன் அவர் புகைப்படம்
எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி
வருகிறது. ரஷ்யாவில் சுமார் 5000 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய அஜித் முடிவு
செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘வலிமை’ படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை
படக்குழுவினர் மேற்கொள்ளவிருக்கின்றனர். விரைவில், இப்படத்தின் டிரைலர் மற்றும்
படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.