சார் என் எருமை பால் கறக்கவில்லை… போலிஸ் ஸ்டேஷனை அதிரவைத்த விவசாயி!

0
Follow on Google News

தனது மாட்டுக்கு யாரோ பில்லு சூன்யம் வைத்து பால் கறக்கவிடாமல் செய்துவிட்டதாக விவசாயி ஒருவர் அளித்த புகாரைக் கேட்ட போலிஸார் அதிர்ச்சியாகியுள்ளனர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் உள்ள நயோகான் எனும் சிறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாபுலால் ஜாதவ். 45 வயதாகும் இவர் சில எருமை மாடுகளையும் வளர்த்து அதில் பால் கறந்து வருவாய் ஈட்டி வந்துள்ளார்.

இதற்கிடையில் சில நாட்களாக அவரின் எருமை மாடு ஒன்று சரியாக பால் கறக்கவில்லையாம். இது சம்மந்தமாக ஊரில் உள்ளவர்களிடம் புலம்பியுள்ளார். அவர்களோ எருமைக்கு யாராவது சூன்யம் வைத்திருக்கலாம் என்று சொல்லி அவரைக் குழப்பியுள்ளனர். மேலும் இதை சரிசெய்ய வேண்டுமென்றால் காவல் நிலையத்துக்கு சென்று புகாள் அளிக்கும்படியும் ஆலோசனைக் கூறியுள்ளனர்.

இதை அப்படியே ஏற்றுக்கொண்ட பாபுலால் தனது எருமையை ஓட்டிக்கொண்டு நேராக போலிஸ் ஸ்டேஷனுக்கே சென்று புகாரும் அளித்துள்ளார். விவசாயியின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் அவரைக் கால்நடை மருத்துவரை சென்று சந்திக்க சொல்லி அறிவுரைக் கூறியுள்ளனர்.

பின்னர் கால்நடை மருத்துவர் அளித்த சிகிச்சையில் எருமை இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கம்போல பால் கறக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து மறுநாள் தனது எருமையோடு மீண்டும் காவல் நிலையம் சென்ற பாபுலால் காவலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.