புரெவி புயலுக்கு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சரிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதமர் தொலைபேசியில் தமிழ்நாடு முதலமைச்சரை தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்த “நிவர்” புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளினால் உயிரிழப்பு குறைக்கப்பட்டதற்காகவும், விரைந்து மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வந்ததற்காகவும் முதலமைச்சரையும், தமிழ்நாடு அரசையும் பாராட்டினார்.
மேலும், தற்போது வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “புரெவி” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது முதலமைச்சர் பாரதப் பிரதமரிடம், சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் கடந்த 1.12.2020 அன்று “புரெவி” புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி விரிவான அறிவுரைகளை வழங்கியதையும், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய மாவட்டங்களுக்கு மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை நியமித்து மாவட்டங்களில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட அறிவுறுத்தியதையும்,
மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக, பத்திரமாக கரை திரும்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 473 விசைப்படகுகள் பத்திரமாக கரை திரும்பியுள்ளதையும், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதையும்,
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் கன்னியாகுமரி (2), திருநெல்வேலி (3), தூத்துக்குடி (2) மற்றும் இராமநாதபுரம் (3) மாவட்டங்களில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும், 24 மணி நேரமும் செயல்படும் மாநில மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் கூடுதல் அலுவலர்களுடன் செயல்பட அறிவுறுத்தியதையும் விளக்கிக் கூறினார். அதற்கு பாரதப் பிரதமர், தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அனைத்து வகையிலும் மத்திய அரசு உதவுவதாக தெரிவித்தார்.இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.