உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளில் 47 சீட்டுக்களை வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. 36 சீட்டுகள் தேவையான இடத்தில் 11 சீட்டுக்கள் அதிகம் வென்று வரலாற்று வெற்றியை பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களிலும் சுயேச்சை 4 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது.
ஆனாலும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது சொந்த தொகுதியான காதிமாவில் 6579 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இருந்தபோதிலும் அவரை மீண்டும் முதல்வராக ஒருமனதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர். தலைமையின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அதையடுத்து மீண்டும் முதல்வர் பொறுப்பேற்ற புஷ்கர் சிங் தாமி அடுத்த ஆறுமாத காலங்களுக்குள் எதாவுது ஒரு தொகுதியில் நின்று வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சம்பவாட் தொகுதி பிஜேபி சட்டமன்ற உறுப்பினரான கைலாஷ் சந்த்ர கட்டோரி உத்தரகாண்ட் சட்டசபை சபாநாயகரான ரித்து கந்தூரியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ராஜினாமாவை அளித்திருந்தார். ராஜினாமா அளிக்கையில் அவருடன் மாநில பிஜேபி தலைவர் மதன் கௌஷிக் அமைச்சர் சாந்தன் ராம் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
ராஜினாமா அளித்த கையோடு முதல்வர் தாமியை சந்தித்த கைலாஷ் தனது தொகுதியில் போட்டியிடுமாறும் தொகுதி மக்களுக்கு உங்களால் மட்டுமே நல்லது செய்யமுடியும் என்றும் கோரிக்கை எழுப்பினார். அதை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் மே 31 நடக்கும் என அறிவித்தது. இதனிடையே முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முதலில் பூர்ணகிரி மாதா கோவிலுக்கு சென்ற அவர் வழிபாடு நடத்திவிட்டு வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ” மா சாரதா, மா பூர்ணகிரி, ஸ்ரீ கோல்ஜூ மஹாராஜ் ஆகியோர் ஆசிர்வாதத்துடன் எனது வேட்புமனுவை தாக்கல் செய்தேன். சம்பவட் மக்களின் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்றுவருகிறேன்.
அவர்கள் என்னை ஆதரிப்பதால் மூலம் ஊக்குவிப்பார்கள் என நம்புகிறேன். சம்பவட் தொகுதியின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என தெரிவித்தார். காங்கிரஸ் சார்பில் நிர்மலா கட்டோரியை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் கடும்போட்டியை கொடுத்து புஷ்கர் சிங்கை மீண்டும் முதல்வராக விடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு காங்கிரஸ் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த இடைத்தேர்தலில் தாமி தோற்றால் மீண்டும் முதல்வராக முடியாது என்பதால் பிஜேபியும் தனது பங்கிற்கு தொகுதியில் இறங்கி களப்பணி செய்துவருகிறது.