இலங்கை : இலங்கையில் தற்போது இருக்கும் கலவர சூழலை உலகநாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. இலங்கையில் சென்னையின் காலடி பதிந்த பின்னரே பல சிக்கல்கள் உருவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. மேலும் இந்த சூழலை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திவிட கூடாது என்பதில் இந்தியா மிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
பரபரப்பான சூழல் நிலவும் இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என கூறியிருந்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய கோத்தபய அவரை பிரதமர் பொறுப்பு ஏற்குமாறு வலியுறுத்தினார்.
கிட்டத்தட்ட ஒருமணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியேற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இரண்டு நாட்களுக்குள் அவர் பதவியேற்பார் என கோத்தபய வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் நேற்று அவசரமாக பதவியேற்றுக் கொண்டார். மேலும் முன்னாள் பிரதமர் ராஜபக்சே இருக்கும் இடத்தை இலங்கை அரசு ரகசியமாக வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணிலுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச நியமிக்கப்படலாம் என பலரும் கூறிவந்த நிலையில் அவரது கண்டிஷன்கள் தான் அவரை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. தான் பதவியேற்கவேண்டுமென்றால் அதிபர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.
தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இரண்டும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ரணில் பிரதமர் பொறுப்பேற்றபிறகு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் 15 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற உள்ளனர்.
மேலும் கடந்த காலங்களில் மக்களால் ஒதுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட எவரும் ரணிலின் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. தனது அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே பதவிவிலக போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.