தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடிக்க கூடாது… திமுகவுக்கு வானதி சீனிவாசன் அறிவுரை..

0
Follow on Google News

கோயம்புத்தூர் : பிஜேபி கோவை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீநிவாசன் திமுகவுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். ஆளும்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். ஜூன் 7 அன்று தங்களது பணியை நிரந்தரம் செய்யக்கோரி போராடிய அவர்களை திமுக தலைமையிலானஅரசு கைதுசெய்துள்ளது.

ஆனால் அதிமுக ஆட்சியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போராடியபோது நேரில் சென்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முக.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்த உடன் செவிலியர்கள் பணியை நிரந்தரம் செய்வேன் என தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு தற்போது வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி போராடிய செவிலியர்கள் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் முதல்வாரத்தில் பொதுவிநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த தனித்துறை வேண்டும் என்பன போன்ற சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் ஊழியர்களுக்கு வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் கிடையாது என தொழிலாளர் விரோத போக்குடன் நடந்து கொள்ளும் திமுக அவர்ளிடம் பேச்சுவார்த்தை நடத்த கூட முன்வர மறுக்கிறது.

திமுக தங்களது தேர்தல் அறிக்கையை மீண்டும் படித்து பார்க்க வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடாமல் தொழிலாளர் விரோதப்போக்கை கடைபிடிக்காமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அவர்களின் பிரச்சினையை முதல்வர் தலையிட்டு தீர்வை காண முன்வரவேண்டும்” என வானதி ஸ்ரீநிவாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.