அரியலூர் : அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கிராமம் அருங்கால். இங்குள்ள விவசாயநிலத்தில் இருந்த கிணறு ஒன்றில் கடந்த சிலநாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த மக்கள் நிலத்தின் உரிமையாளரான ரெங்கராஜனுக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் கிணற்றை பார்க்க வந்துள்ளார்.
அவருடன் அக்கம்பக்கத்தினரும் வந்து கிணற்றை பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் ஒரு சாக்குமூட்டை மிதப்பதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து அந்த சாக்குமூட்டையை வெளியில் எடுத்துள்ளனர். அங்கே அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த சாக்குமூட்டையில் அழுகியநிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அனைவரும் திகைத்துள்ளனர். பின்னர் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக போலீசார் அரியலூருக்கு அனுப்பிவைத்துள்ளனர். அடையாளம் தெரியாததால் போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் சடலமாக இருந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசலை சேர்ந்த வசந்தி என்பது தெரியவந்துள்ளது. அவர் அருங்கால் கிராமத்தில் வசிக்கும் செல்வி மற்றும் மாரியாயி என்பவர்களுடன் நெருங்கி பழகிவந்துள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அருங்காலில் நடந்த திருவிழாவிற்கு வந்த வசந்தி செல்வி வீட்டில் பத்துநாட்களாக தங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பணம்கொடுக்கல் வாங்கல் தகராறில் பாலில் தூக்கமாத்திரையை கலந்து செல்வியும் மாரியாயியும் சேர்ந்து வசந்தியை கொன்றுள்ளதாகவும் பின்னர் ஒரு சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொலையை செய்துவிட்டு அரியலூரில் தலைமறைவாக இருந்துள்ளார் மாரியாயி.
அதேபோல செல்வி கரூரில் தலைமறைவாக இருந்துள்ளார். இருவரையும் போலீசார் கைதுசெய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடிவருகின்றனர். மேலும் போலீசார் தரப்பில் கூறியதாக வெளிவந்துள்ள செய்திகளில் ” வசந்தியை பாலியல் தொழிலை செய்யச்சொல்லி செல்வி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் வசந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி மாரியாயி கூட்டணி பாலில் தூக்கமாத்திரைகளை அதிகமாக கலந்துகொடுத்து கொலைசெய்துள்ளனர். இந்த வழக்கில் ஒரு வக்கீலுக்கும் தொடர்பிருக்கிறது. அவரையும் தேடிவருகிறோம்” என போலீசார் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.