குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்றும் சில இடங்களில் மழை தொடர்கிறது. வரலாறு காணாத வகையில் பெய்த இந்த பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன.
குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ‘சென்னை – திருச்செந்தூர் விரைவு ரயில் நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது. ஆனால் ரயில் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்திவிட்டார். ரயில் நிலையத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பயணிகள் வெளியேறத முடியாத நிலை உள்ளது.
மீட்பு பணிகள் தொடங்கிய நிலையில், 300 பயணிகள் மீட்கப்பட்டனர். ஏனைய 500 பயணிகளை மீட்க முடியாத அளவுக்கு வெள்ளம் பெருகிவிட்டது. இதனால், பயணிகள் ரயில் நிலையத்திலேயே தவித்து வருகின்றனர். மாநில அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் உதவியுடன் பள்ளியில் தங்கவைக்கப்பட்ட 300 பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன. ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க இயலாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காகத் தேவையான 2 டன் நிவாரணப் பொருள்களுடன் ஹெலிகாப்டர் சூலூரிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. இந்நிலையில் நிவாரண பொருட்களுடன் இராணுவ விமானம் தற்போது மதுரை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இருப்பினும் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்க முடியவில்லை. இதனால் பேரிடர் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி தலையில் உணவு எடுத்துச்சென்று ரெயில் பயணிகளிடம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே பயணிகளை மீட்பதற்கு கோரிக்கை விடுத்த நிலையில், கனமழை காரணமாக சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை என தேசிய பேரிடர் மீட்பு படையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய ரயில் பயணிகள் எப்படி மீட்கப்படுவார்கள் என்பது குறித்து தெற்கு ரயில்வே இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை வெளியேற்ற தெற்கு ரயில்வே சார்பில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பாலத்தின் கரையில் மண் சரிவு ஏற்பட்டதால் தண்டவாளத்தின் அடிபகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
எனவே, ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில்வேயின் இன்ஜினியரிங் பிரிவு மற்றும் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து சீரமைக்க தேவையான அனைத்து பொருட்களையும் உடனடியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்த 800 பயணிகளில் 300 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். எஞ்சிய 500 பேரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிக்கிய பயணிகளை வெளியேற்ற தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை காலை ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்டு சென்னைக்கு சிறப்பு ரயில் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள். மேலும் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு உணவளிக்கப்படும். பின்னர் அதே ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.