கன்னியாகுமரி : தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுவருவதாக குற்றசாட்டு எழுந்தது. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 500 கிலோ கஞ்சா சமீபத்தில் தூத்துக்குடியில் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. மேலும் தமிழக மாணவர்களிடையே கூட கஞ்சா பழக்கம் இருப்பதாக பகீர் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆப்ரேசன் கஞ்சா 2.0 எனும்பெயரில் வேட்டை நடத்தி பலரை போலீசார் கைதுசெய்தனர். அதைதொடர்ந்து அனைத்து வாகனங்களும் போலீசார் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தக்கலை அழகியமண்டபம் ஆகியபகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் சென்றதால் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த செல்வின் (பளுதூக்கும் வீரர்) மற்றும் மனோஜ் என்பது தெரியவந்தது. இந்த செல்வின் கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் ஒரு பெண் காவல் ஆய்வாளரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
மனைவி மூலம் கஞ்சா கடத்தல் கும்பலுடன் தொடர்பு கிடைக்க மும்பையில் மொத்தவிலையில் கஞ்சா வாங்கி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். கேரளா தமிழ்நாடு என இரண்டு மாநிலங்களுக்கும் கஞ்சா கடத்திச்சென்றதாக தெரியவந்ததையடுத்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக அந்த பெண் காவல் ஆய்வாளரை விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கோரியுள்ளனர்.