மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாலிபர் கடத்தப்பட்ட காரணமாக இரண்டு போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் உச்சிப்புளி பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் மாரீஸ்வரன். இவர் திருட்டு போன்ற பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பல வழக்குகளும் இவர் மீது நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் உச்சிப்புளி பகுதியில் ஒரு கடையில் திருட்டு நடைபெற்றுள்ளது.
இதனால் இந்தத் திருட்டுக்கு மாரீஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பதற்காக போலீசார் அவரை விசாரிக்க சென்றனர். ஆனால் மாரீஸ்வரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் மாரீஸ்வரனை உச்சிப்புளி போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டனர். ஆனால் மாரீஸ்வரன் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மாரீஸ்வரனுடன் பாதுகாப்பிற்காக உச்சிப்புளி காவல் நிலையத்தை சேர்ந்த ராமமூர்த்தி, தாமோதரன் என்ற இரண்டு ஏட்டுக்களை அனுப்பி வைத்தனர்.
மாரீஸ்வரன் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்த அறையில் பாதுகாப்புக்கு தங்கியிருந்த இரண்டு ஏட்டு போலீசாரை உள்ளே வைத்து பூட்டி மாரீஸ்வரனை கடத்திச் சென்றுள்ளனர். இந்த இரண்டு ஏட்டுகளின் பணியில் உள்ள கவனக்குறைவினால் தான் மாரீஸ்வரனை கடத்திச் சென்றுள்ளதாக இவர்கள் இருவரையும் ராமநாதபுரம் எஸ்பி சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் போலீசாரை பூட்டி வைத்து வாலிபரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.