தேனி : சின்னமனூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அய்யாச்சாமியின் இளையமகனான அரவிந்த் என்பவர் உறவுக்காரப்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து இருவீட்டினரும் பேசி கல்யாணத்தை நடத்த முடிவெடுத்தனர். மேலும் நேற்று அரவிந்திற்கும் அந்த பெண்ணிற்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் அய்யாசாமியின் மூத்த மகனான மூவேந்திரன் தனது குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காலையில் அனைவரும் திருமண மண்டபத்திற்கு செல்லும் போது மீண்டும் கடுமையாக தந்தையுடன் சண்டை போட்டுள்ளார். எனக்கு திருமணம் செய்தபின்னரே தம்பிக்கு திருமணம் செய்யவேண்டும் என பயங்கர தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒருவழியாக அனைவரும் சமாதானமானபின்னர் திருமணமண்டபத்திற்கு சென்றுள்ளனர். மண்டபத்தில் திருமணம் முடிந்தபின்னர் அனைவரும் வீட்டிற்கு திரும்பியபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே வீட்டில் ஒரு அறையில் மூவேந்தர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். உடனடியாக வீட்டில் இருந்த திருமண அலங்காரங்களை அகற்றிவிட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மூத்தவன் இருக்கையில் இளையவனுக்கு திருமண ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக உறவினர்களிடம் கூறியுள்ளனர் குடும்பத்தினர். இதனிடையே திருமணத்திற்கு வந்த உறவினர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மூவேந்தரின் தலை மற்றும் சில இடங்களில் பலத்த காயங்கள் இருப்பதை கண்டனர். மேலும் ரத்தம் கசிந்தவாறே இருந்துள்ளது.
அதைத்தொடர்ந்து சின்னமனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்துவந்து சடலத்தை கைப்பற்றினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மகனுக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கம்பியை கொண்டு மூவேந்தரை தாக்கியுள்ளார் அய்யாசாமி. இதில் நிலைகுலைந்த மூவேந்தர் எதிர்பாராமல் இறந்துவிட்டார். உடனே அய்யாசாமி தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.