தவறான சிகிச்சை.. இளம்பெண் மரணம்… உறவினர் முற்றுகை தனியார் மருத்துவமனைக்கு சீல்..

0
Follow on Google News

சேலம் : மருத்துவர் ஒருவரின் தவறான சிகிச்சையால் இளம்பெண் ஒருவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொந்தளித்த உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அதனால் அந்த பகுதியே பரபரப்புக்குளாகியிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சவரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சங்கீதா. வயது 28. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண்குழந்தை உள்ளனர். வயது முறையே 11 மற்றும் 7. தம்பதிகள் இருகுழந்தைக்கு மேல் வேண்டாம் என அரசின் அறிவுரையை மதித்து எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையாக அரவிந்த் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவைசிகிச்சை சங்கீதாவுக்கு செய்யப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பிய நாள் முதல் வயிற்றுவலி தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இந்தகாரணத்தால் சங்கீதா மீண்டும் அதே அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மீண்டும் அவர் பரிசோதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர் சங்கீதாவின் உறவினர்களிடம் வயிற்றில் ரத்தக்கட்டி இருப்பதாக கூறியுள்ளார். அதில் உறவினர்கள் பயந்துபோயுள்ளனர்.

மீண்டும் இரண்டாவது முறை ஒரு அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் கூறியதால் உறவினர்கள் சம்மதித்துள்ளனர். மறுபடியும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு வீடுதிரும்பியுள்ளார் சங்கீதா. இந்நிலையில் வீடு திரும்பிய சங்கீதாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மீண்டும் அதேமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்றாவது முறையாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து தப்பான சிகிச்சை கொடுத்து சங்கீதாவை கொன்றுவிட்டதாக உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். தகவலறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். மேலும் தொடர்புடைய மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இளம்பெண் ஒருவர் தவறான சிகிச்சையால் மரணமடைந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.