45 கோடி செலவில் ஜல்லிக்கட்டு மைதானம்… உலக தரத்தில் தமிழனின் வீரம் பறைசாற்றும் இந்த மைத்தனத்தில் அப்படி என்ன சிறப்பு அம்சம் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சங்க காலம் தொட்டு இன்று வரை தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தில் ரத்தமும் சதையுமாய் கலந்த ஒன்று ..ஜல்லிக்கட்டு என்று சொன்னாலே அது உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் எல்லாத்துக்கும் ஞாபகம் வரும் அப்பேர்ப்பட்ட அலங்காநல்லூருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உலக அரங்கில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கொண்டு செல்லும் வகையில் உலகிலேயே முதல் முறையாக ஜல்லிக்கட்டுக்கு உலக தரத்தில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையன்று தொடங்கி, பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழ்நாடு முழுவதும் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் திரள்வார்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் ஊருக்குள்ளேயே இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது.

தற்காலிக கேலரி அமைக்கப்படும்போது, அது சரிந்து விழும் அபாயமும் இருந்து வந்தது. மேலும் அதிகமானோர் கூடினால், ஜல்லிக்கட்டை பார்ப்பதில் சிரமமும் இருந்து வந்தது. இப் பிரச்சனைகளை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவில் சுமார் 66.8 ஏக்கரில் 4500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் ரூபாய் 44.6 கோடியில் மூன்று தளங்களுடன் பிரமாண்ட மைதானம் உலக தரத்தில் கட்டப்பட்டு வருகிறது ..

பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் ஹைடெக் முறையில் அமைக்கப்பட்டுள்ளது ..ஜல்லிக்கட்டு மைதான வளாகத்தில் அருங்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு மட்டுமில்லாது பல்லாங்குழி ஆடுபுலி ஆட்டம் கபடி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள் காட்சிப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது ..

தரைதளத்தில் வாடிவாசல் நிர்வாக அலுவலகம்,மாடுபிடி வீரர்களுக்கான இடம் காளைகள் பரிசோதனை மையம் முதலுதவி மையம் பத்திரிகையாளர் கூடம் காளைகள் பதிவு செய்யும் இடம் தற்காலிக விற்பனை கடைகள் பாதுகாப்பு பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன….16,921 சதுர அடியில் அமைக்கப்படும் முதல் தளத்தில் விஐபிகள் அமரும் அறை மற்றும் அவர்களின் தங்கும் அறைகள் இடம் பெற்றுள்ளன ..

9020 சதுர அடியில் அமைக்கப்படும் இரண்டாவது தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைக்கும் அறைகளும், 1140 சதுர அடியில் அமைக்கப்படும் மூன்றாவது தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன .இது மட்டும் அல்லாமல் அலங்காநல்லூரில் இருந்து கீழக்கரையில் அமைந்துள்ள இந்த மைதானத்திற்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து கீழக்கரை பகுதி மக்கள் கூறுகையில்..,” அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி எங்கள் கிராமத்தில் நடைபெறுவது எங்களுக்கு பெருமையான ஒன்று. தற்போது கட்டியுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் போல பிரமாண்டமாக உள்ளது. இதனால் எங்கள் பகுதி வளர்ச்சியடையும். இந்த மைதானத்தில் ஏகப்பட்ட பார்வையாளர்கள் ஒரே சமயத்தில் ஜல்லிக்கட்டை காண முடியும்” என மகிழ்ச்சி தெரிவித்தனர்.வரும் பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தரமான பொங்கலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.