நகையை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி தற்கொலை செய்த ஐடி பெண் ஊழியர்..!

0
Follow on Google News

சென்னை : மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவருக்கு பவானி (29) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாக்யராஜ் தனியார் நிறுவனம் ஒன்றில் அதே பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவானி கந்தன்சாவடியில் இயங்கிவரும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்நிலையில் பவான் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருமணமாகி ஆறே ஆண்டுகள் ஆன நிலையில் பவானியின் தற்கொலை பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனிடையே பவானி மரணம் குறித்து மணலிபுதுநகர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்துவந்த போலீசார் பவானியின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி மருவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

அதையடுத்து போலீசார் தங்கள் வழக்கமான விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. பவானி மணலிபுதுநகரில் இருந்து கந்தன்சாவடிக்கு தினமும் ரயிலில் சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கு மொபைலில் ரம்மி விளையாட்டு இருப்பதையறிந்து ஆன்லைன் ரம்மி விளையாட தொடங்கியுள்ளார் என போலீஸ் குறிப்பிட்டுள்ளது.

முதலில் தன்னுடைய வங்கிக்கணக்கில் வைத்திருந்த சேமிப்பை வைத்து விளையாடி வந்த அவர் ரம்மியின் மீதான மோகத்தால் வீட்டிலிருந்த 20 சவரன் நகையையும் வைத்து விளையாடியுள்ளார். இது கணவர் பாக்யராஜுக்கு தெரியவரவே கூப்பிட்டு கண்டித்துள்ளார். இருந்தபோதும் ரம்மிபோதை விடாததால் தொடர்ந்து விளையாண்டு அனைத்தையும் இழந்ததாக கூறப்படுகிறது.

தனது சகோதரிகளிடம் நான்கு லட்சம் கடன்பெற்றும் விளையாண்டதாக சொல்லப்படுகிறது. அதையும் இழந்ததால் மனவிரக்தியில் இருந்த பவானி சம்பவத்தன்று வீட்டில் இருந்த கணவரிடம் குளிக்க செல்கிறேன் என கூறிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியான முதல் பெண் பவனி என்பது மிகப்பெரும் சோகமான விஷயமாகும்.