திருவாரூர் : ஹோட்டலில் சாப்பிடும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதையடுத்து போலீசார் அந்த பகுதி முழுவதும் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஹோட்டல் நடத்திக்கொண்டிருப்பவர் 50 வயதான ராமானுஜம். இவரின் உணவகத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அப்துல் சுபகார் என்பவரது மகனான சிக்கந்தர் (37) என்பவர் தனது குடும்பத்துடன் முத்துப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தர்கா ஒன்றில் தரிசனம் செய்துவிட்டு உணவருந்த வந்தார்.
சாப்பிட உணவுக்கு பில் அதிகமாக இருப்பதாக கூறி சிக்கந்தர் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இருவருக்குள் நடந்த கைகலப்பில் ஹோட்டலில் உள்ள பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது. இதில் கோபமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் சிக்கந்தர் வாகனத்தின் டயரை சேதப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே சிக்கந்தருக்கு ஆதரவாக ஒருபிரிவினரும் ஹோட்டலுக்கு ஆதரவாக ஒருபிரிவினரும் கூட்டம் கூட ஆரம்பித்தனர். இதனால் இருபிரிவினரிடையே வன்முறை ஏற்படும் சூழல் உருவானது. தகவலறிந்த போலீசார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டனர். பிறகு இரு பிரிவினரையும் சமாதானப்படுத்தி வழியனுப்பி வைத்தனர். மேலும் ஹோட்டல் உரிமையாளர் ராமானுஜம் மற்றும் சிக்கந்தர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இதனிடையே நேற்று அதிகாலை நான்கு மணியளவில் முத்துப்பேட்டை ECR சாலையில் அமைந்துள்ள செம்படவன்காடு அதிமுக நகர இளைஞரணி துணைச்செயலாளர் சந்திரபோஸ் என்பவரின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல்குண்டு வீசினர். சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த வீட்டினர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த புல்லட் பைக் எரிவதை கண்டு அலறினர்.
இந்த சம்பவம் குறித்து சந்திரபோஸ் முத்துப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார். ஹோட்டல் சம்பவத்திற்கும் இந்த பெட்ரோல் குண்டுவீச்சிற்கும் தொடர்பிருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.