விருதுநகர் : விருதுநகர் மாவட்ட விசிக தொழிற்சங்க துணை செயலாளராக இருப்பவர் கண்ணன். இவர் தடங்கம் அருகேயுள்ள அம்பேத்கார் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி தூய்மைப்பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கண்ணனுக்கு மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகனான சுப்பிரமணியன் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் போய்விட்டார். இரண்டாவது மகனான மாரிமுத்து சில வருடங்களுக்கு முன்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மூன்றாவது மகன் சந்தனகுமார் கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். கடைக்குட்டி மகள் வீட்டிலேயே உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியை ஒட்டியுள்ள ஆர்.ஆர். நகர் கேட் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் சில காணாமல் போயுள்ளன. ஆடுகளை திருடியது தடங்கம் கிராமத்தை சேர்ந்த பொத்தய்யன் என்பவரின் நெருங்கிய உறவினர்கள் தான் என கூறப்பட்டது.
ஆனால் ஆடுகளை திருடியசம்பவத்தில் ஈடுபட்டது மணிகண்டனும் அவரது கூட்டாளியான சந்தகுமாரும் தான் என பொத்தய்யன் தரப்பு கூறிவந்தது. இதை தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சண்டையை விலக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் சிலநாட்கள் கழித்து கோயம்புத்தூரில் இருந்து திரும்பிய சந்தனகுமார் தனது கூட்டாளியான மணிகண்டனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். தங்களை தான் நக்கல் செய்கிறார்கள் என எண்ணிய பொத்தய்யன் மகனான மணிகண்டன் அவர்களிடம் சண்டையிட்டுள்ளார். மீண்டும் சிலர் வந்து சமரசம் செய்துள்ளனர்.
இந்நிலையில்தான் நேற்றுமுன்தினம் ஊரிலிருந்து திரும்பிய சந்தனகுமார், மணிகண்டனை அழைத்துக்கொண்டு இரவு 9ம் மணிக்குமேல் வெளியில் சென்றுள்ளார். அவரையும் நண்பரான மணிகண்டனையும் பொத்தய்யன் மகன் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வெட்டிக்கொன்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வச்சக்கரப்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.