தருமபுரி : அதிமுகவும் பரபரப்பான குற்றசாட்டை முன்வைத்துள்ளது.பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏவான கோவிந்தசாமி கூறுகையில் ஆளும்கட்சியினர் செய்யும் முறைகேடுகளுக்கு தருமபுரி கலெக்டர் தடையாக இருக்கிறார். அதனாலேயே தடாலடியாக அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தருமபுரி மாவட்ட 44 ஆவது ஆட்சியராக திவ்யதர்ஷினி கடந்த 2021ல் பதவியேற்றார். பதவியேற்ற நாள்முதல் தனது எளிமையான தோற்றம் நேர்மையான அணுகுமுறை ஆகியவற்றால் குறைந்த காலத்திலேயே மக்களிடமும் சக அதிகாரிகளிடமும் நற்பெயரை பெற்றார். அதிலும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து உடனடியாக தீர்வுகளை வழங்கியது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் அலுவல் சார்ந்த பணிகளை வெளிப்படையாக செய்யும் கலெக்டர் அரசு நடத்தும் விழாக்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை புறக்கணிப்பதாக கூறி திடீரென போராட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தார். கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் தற்போதும் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி மீண்டும் பரபரப்பான குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் பணிகளிலும் அலுவலகத்திலும் ஆளும்தரப்பின் தலையீடு இருப்பதாகவும் அதை தட்டிக்கேட்டு அவர்களின் தவறுகளை அனுமதிக்காத மாவட்ட ஆட்சியர் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. மீண்டும் அவரையே தருமபுரி ஆட்சியராக நியமிக்கவேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.