திருச்சி : திருச்சி மாவட்டம் கல்லணை அருகே அமைந்துள்ளது கிளிக்கூடு கிராமம். இந்தக்கிராமத்தில் பழமையான அரசால அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அம்மன்சிலையை வாங்கிய உத்தமர்சீலி பொதுமக்கள் மீண்டும் தரமறுப்பதாக கூறி தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.
கிளிக்கூடு கிராம அரசால அம்மன் கோவில் சிலையை சுற்றுப்புற கிராமங்களான கவுத்தரச நல்லூர் உத்தமர்சீலி ஆகிய கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு கொண்டு சென்று வணங்கிவிட்டு குறிப்பிட்ட நாட்களில் தருவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் பவுர்ணமியன்று உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
அந்த விழாவிற்காக உத்தமர்சீலி கிராமத்தினர் கிளிக்கூடு கிராமத்தினரிடம் அரசால அம்மன் சிலையை இரவல் வாங்கி திருவிழாவை நடத்தியுள்ளனர். அதேபோல கிளிக்கூடு கிராமத்தில் 12 மற்றும் 13.14 ஆகிய தேதிகளில் நாள் குறித்து திருவிழாவை நடத்த பொதுமக்கள் தயாராகினர். அதனால் அம்மன் சிலையை திருப்பிக்கேட்டு உதித்தமர்சீலி கிராமத்தினரை அணுகியுள்ளனர்.
கடந்த 5ம் தேதி மேளதாளங்கள் முழங்க அம்மனை வரவேற்க கிளிக்கூடு கிராமத்தினர் உத்தமர்சீலிக்கு சென்றனர். ஆனால் உத்தமர்சீலி கிராமத்தினர் அரசால அம்மன் சிலையை தரமறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் கிளிக்கூடு கிராமத்திற்கு வந்து உத்தமசீலி மக்கள் சிலையை வாங்க சொல்லியுள்ளனர்.
அம்மனை வரவேற்க கிராமத்தினர் சென்றுள்ளனர். அங்கு கவுத்தரச நல்லூரை சேர்ந்த நல்லேந்திர கருப்பு சிலையும் கிளிக்கூடு திருவிழாவில் கலந்துகொள்ளவேண்டும் என உத்தமர்சீலி கிராமத்தினர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கொந்தளித்த கிளிக்கூடு மக்கள் கல்லணை திருவானைக்காவல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அதையடுத்து போலீசார் விரைந்துவந்தனர். சமயபுரம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் கிளிக்கூடு மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அரசால அம்மன் சிலையை மீட்டு தர தக்கநடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதன்பிறகே பொதுமக்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.