மதுரை கோவிட்-19 வார்டில் பணிபுரிந்த செவிலியரிடம் 6 பவுன் நகை பறிப்பு..! 24 மணிநேரத்தில் கைது செய்த போலீசார்..

0
Follow on Google News

மதுரையில் செயின் பறிப்பு குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் 20 கி.மீ துரத்தி கைதுசெய்த குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார். சண்முகபிரியா என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட்-19 வார்டில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். 31.05.2021 ம் தேதி அதிகாலை 02.00 மணிக்கு அவர் கோவிட்-19 வார்டில் அலுவல் புரிவதற்காக வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியிலிருந்து சென்றார்.

தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றவர் யானைக்கல் புதுப்பாலத்தின் நடுவில் சென்றுக்கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூன்று நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்க செயினை பறித்துள்ளனர். பதறிபோய் அந்த செவிலியர் நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தவுடன் அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்துள்ளனர்.

கீழே விழுந்ததால் அவருக்கு தலையின் பின்புறம் இரத்த காயமும், கன்னம், நெற்றி ஆகிய பகுதிகளில் சிராய்ப்பு காயமும் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை காவலர் ஒருவர் காப்பாற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். சிகிச்சையில் இருந்த செவிலியரிடம் செல்லூர் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி புகார் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வழக்கின் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., உத்தரவிட்டார்கள். மதுரை மாநகர் காவல் துணை ஆணையர், குற்றம் முனைவர். கி.இராஜசேகரன் IPS., அவர்களின் நேரடி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டதில் வில்லாபுரத்திலிருந்து குற்ற சம்பவ இடமான ஏ.வி.பாலம் வரை உள்ள CCTV கேமரா பதிவுகளை தீவிரமான ஆராய்ந்தனர்.

இந்நிலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அசாருதீன் என்ற முண்டகன்னி,ஜெல் என்ற சல்மான்கான், மற்றும் மாலிக் பைசல், என்பதும் விசாரணையில் தெரியவந்தது. எதிரிகளை விரைவில் பிடிக்க துரித நடவடிக்கைகளை காவல் துணை ஆணையர் குற்றம் அவர்கள் மேற்கொண்டார்கள். தனிப்படையினர் குற்றவாளிகள் மூவரையும் சுமார் 20 கி.மீ துரத்தி மதுரை மாவட்டம் சக்குடி பாலத்தில் வைத்து பிடித்து விசாரித்த போது மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

ஆகவே மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 6 பவுன் எடையுள்ள செயின் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றவாளிகளான சல்மான்கான் மற்றும் அசாருதீன் ஆகிய இருவர் மீதும் மதுரை மாநகர் தல்லாகுளம், தெப்பக்குளம், விளக்குத்தூண், அண்ணாநகர், புதூர், தெற்குவாசல், மதிச்சியம் ஆகிய காவல் நிலையங்களில் 20 வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. 24 மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்க செயினை கைப்பற்றிய தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. பாராட்டினார்கள்.