தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் கிரிக்கெட் அணியில் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தாலும், ஏற்கனவே இதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக செயல்பட்டு வரும் கோலி, ஐசிசி கோப்பைகளை வெல்லவில்லை என்பது ஒன்றே குறையாக சொல்லப்படுகிறது. அதனால் ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் கோலி தானாகவே பதவி விலகுவார் என 48 மணிநேரம் காத்திருந்ததாகவும், அவர் இறங்கி வராததால் நீக்கப்பட்டதாகவும் பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் கோலி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பிசிசிஐ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது பிசிசிஐ தலைவர் கங்குலி அளித்துள்ள விளக்கத்தில் ‘வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு ஒரே கேப்டன் இருப்பதுதான் சரியாக இருக்கும். கோலி டி 20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்த போது நாங்கள் தடுத்தோம்.
ஆனால் அவர் அந்த முடிவை எடுத்தார். டெஸ்ட் அணிக்கு கோலி தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார். ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.