ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் இவர்தான்! 70 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்!

0
Follow on Google News

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக்கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸி டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த சில ஆண்டுகளாக டிம் பெய்ன் செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் பல தொடர்களை ஆஸி அணி இழந்தாலும், அவரே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அடுத்த மாதம் பாரம்பரியம் மிக்க ஆஷஸ் தொடர் நடக்க உள்ள நிலையில் அதையும் அவரே வழிநடத்துவார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்குக் காரணம் அவர் 2017 ஆம் ஆண்டு தன்னுடன் பணியாற்றிய டாஸ்மானியா கிரிக்கட் அமைப்பின் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போதே அது சம்மந்தமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் டிம் பெய்ன் குற்றமற்றவர் என வாதிட்டார். ஆனால் இப்போது அவர் அனுப்பிய புகைப்படம் மற்றும் குறுஞ்செய்தி ஆகியவை வெளியாகி உள்ளன. இதையடுத்து தனது தவறுக்காக அவர் ஆஸி அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் ஒரு வீரராக அணித்தேர்வில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆஷஸ் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் டிம் பெய்ன் ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியது. புதிய கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்தது. இதையடுத்து டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இப்போது கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்குக் கூட வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட கேப்டனாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. துணைக் கேப்டனாக முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்க்கப்பட்டுள்ளார்.