2023 உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது. இந்திய அணி பேட்டிங்கின்போது ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரைதான் பவுண்டரி, சிக்ஸர்கள் கிடைத்தன. ரோஹித் ஆட்டமிழந்து சென்றபின், பவுண்டரியை பார்ப்பதே கடினமாக இருந்தது.
பவுண்டரிகள் மூலமே அதிகமாக ஸ்கோர் செய்ய முடியும் ஆனால், ஆடுகளத்தின் தன்மை, ஆஸ்திரேலியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் பவுண்டரிகளை இந்திய பேட்டர்கள் அடிக்காதது ஸ்கோரை உயர்த்த முடியாதமைக்கு முக்கியக் காரணமாகும். பின்னர் மிக இலகுவான இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னில் வெளியேறினார்.
அவர் ஷமி பந்துவீச்சில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதுபோல் மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் லபுசேன் இணை, நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அதிலும் ஹெட், 95 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
இந்த இணையைப் பிரிக்க, ரோகித் சர்மா பல வழிகளைக் கையாண்டபோதும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி, 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. முன்னதாக, முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து ஆஃப்கானிஸ்தானுடன் வாழ்வா சாவா போட்டியில் வென்று, பின்னர் அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவை வெளியேற்றி ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி கோப்பையை தட்டிப்பறித்துள்ளது ஆஸ்திரேலியா.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தோல்விக்கு என்ன காரணம் என்பதனை கிரிஸ் ஸ்ரீகாந்த் தற்போது கூறியுள்ளார். இந்திய அணி பவுலிங் செய்யும் போதே கிரிஸ் ஸ்ரீகாந்த் தோல்விக்கான காரணங்களை அடுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ரோஹித் சர்மா ஸ்லிப் வைக்காமல் ஆடுகிறார் என்று கூறினார். மேலும் லெப்ட் ஹேண்ட் பவுலர் வரும் போது ஸ்லிப் முக்கியம்.
ஆனால் அதை வைக்கவில்லை என்று ரோஹித் ஷர்மா தவறை சுட்டி காட்டினார்.. மேலும் அவர் கூறியதாவது, “. சிராஜுக்கு ஓவர் கொடுத்த மிடில் ஓவர்களில் ஜடேஜாவை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ரோஹித் அதை செய்யவில்லை. இது பெரிய தவறு. ஆட்டத்தை 40 ஓவருக்கு மேல் கொண்டு செல்ல ரோஹித் நினைக்க கூடாது. 40 ஓவருக்கு முன் முடிக்க வேண்டும். ஆனால் ரோஹித் இதை செய்யவில்லை.
இறுதிப் போட்டியில் சிராஜ் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் சிராஜ் பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இல்லை. பும்ரா, ஷமி இருவரும் முதல் 10 ஓவர்களை கட்டுப்படுத்திய நிலையில், அதன்பின் பவுண்டரிகளை வழங்கி ஹெட்டுக்கு நம்பிக்கையூட்டியது சிராஜ் பந்துவீச்சுதான்.
அணியில் ரோஹித் சர்மா, சிராஜை எடுத்திருக்கவே கூடாது. முகமது சிராஜ் ஆடியதற்கு பதில் அஸ்வின் இறங்கி இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியில் அவர் முக்கிய பங்காற்றினார்.
அதேபோல் இறுதிப்போட்டியிலும் அஸ்வின் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது என்பதால், கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளராகவும், ஆல்ரவுண்டராகவும் அஸ்வின் இருப்பது பலமாக அமையும். ஆனால், இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.” என்று ஸ்ரீகாந்த் தோல்விக்கான காரணங்களை தெரிவித்துள்ளார்.