உதயநிதி குடும்ப பெண்களை அவமானப்படுத்தி கேலி சித்திரம்.! நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் புகார் மனு.!

0
Follow on Google News

தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்ப பெண் உறுப்பினர்கள் பற்றி அவதூறாகவும், கேலியாகவும் சித்தரித்து பெண்களை அவமானப்படுத்தி, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதத்தில், “தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகம்” என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள்மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி MP காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார், அந்த புகார் மனுவில் தெரிவித்ததாவது,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 2019-நாடாளுமன்றத் தேர்தலின்போதிலிருந்து எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உறுதுணையாக, தமிழ்நாட்டின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களின் பேராதரவைப் பெற்று, குறிப்பாக இளைஞர்களின் ஆதரவைப் பெற்று, தி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட்டார்.

இந்நிலையில், எதிர்வரும் 2021-தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமம் முதல் மாநகரம் வரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவை பெற்று வருகிறார். நாளுக்கு நாள் அவருக்கு பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்று, தி.மு.க.வுக்கு பேராதரவினை ஈட்டி வருகிறார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர் அவர்மீது வேண்டுமென்றே, அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகளையும் – தரமற்ற விமர்சனங்களையும் அவர்மீது சுமத்தி வரும் நிலையில், நேற்று (14.1.2021), அ.தி.மு.க. கட்சி வண்ணத்தில் “தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகம்” என்ற பெயரில், திரு.உதயநிதி ஸ்டாலின்மற்றும் அரசியலுக்கே தொடர்பில்லாத அவரது குடும்ப பெண் உறுப்பினர்களின் படங்களை கொண்ட சுவரொட்டிகள் அச்சிட்டு, சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளர்.

அரசியல் ரீதியான விமர்சனங்களை தவிர்த்து – அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு தொடர்பே இல்லாத குடும்ப பெண் உறுப்பினர்களை கேலியாகவும் – அவதூறாகவும் – தரக்குறைவாகவும் குறிப்பிட்டு, அவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். (அச்சுவரொட்டியின் போட்டோ நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) மேலும், அரசியல் ரீதியாக எந்த விமர்சனங்களையும், எங்கள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் எதிர்கொள்ள தயாராக உள்ளார். ஆனால், அதனை விடுத்து, அரசியலுக்கு அப்பாற்றபட்ட, சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்கள்மீதும் பெரும் பற்று கொண்ட குடும்ப பெண் உறுப்பினர்களை கேலியாகவும் – அவதூறாகவும் – தரக்குறைவாகவும் பேசி, அவரது குடும்ப பெண் உறுப்பினர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதத்தில் பேசியும் – சுவரொட்டிகள் ஒட்டியும் வருவது, பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்.

மேலும், இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டும்போது “இந்திய அச்சகச் சட்டத்தின்படி (Indian Press Act) அச்சிடுவோர் மற்றும் வெளியிடுவோர் பெயர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று இருந்தும், அதற்கு மாறாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், பெண்களை இழிவுபடுத்தும் கெட்ட நோக்கோடு செயல்படும் அ.தி.மு.க. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நபர்கள்மீது ‘பெண்கள் வன்கொடுமைச் சட்டம்’ மற்றும் ‘இந்திய அச்சகச் சட்டப்படி’ (Indian Press Act) தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தங்களை கேட்டுக் கொள்கிறேன். என திமுக அமைப்புச் செயலாளர், ஆர்.எஸ். பாரதி, எம்.பி., புகார் மனுவில் தெரிவித்துள்ளார்,