தமிழர்களின் புகழை மறைக்கும் திராவிடத்தை கைவிட்டு… இதை உடனே முதல்வர் செயல்படுத்த வேண்டும்.. தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் வலியுறுத்தல்..

0
Follow on Google News

1919 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அறிந்த தமிழர்களே அதற்கும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டு நமது தமிழ் மண்ணில் திருப்பத்தூரில் நடந்த படுகொலை பற்றி அறியாமல் இருப்பது ஏன்…??? அக்டோபர் 24 1801 இந்திய சுதந்திர போராட்டத்திற்காக போராடிய சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் அவரது ஒட்டு மொத்த குடும்பத்தையும் 500 க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொத்து கொத்தாக கர்னல் அக்னியூ தலைமையிலான ஆங்கிலேயர்கள் படை தூக்கிலிட்டு படுகொலை செய்தது.

இந்த படுகொலையே இந்திய சுதந்திர போராட்டத்தில் நடந்த முதல் மிகப்பெரிய படுகொலை ஆகும் ஆனால் திருப்பத்தூர் படுகொலை பற்றி அறியப்படாத ஒவ்வொரு தமிழனும் அறியப்படவேண்டிய வரலாற்றை, மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இன்றைய தினத்தில் தெரிந்து கொள்வோம். ஆர்க்காடு நவாப்பைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தெற்குச் சீமை சுதந்திர தேசங்களை ஆர்க்காடு நவாப் படையுடன் இணைந்து ஆக்கிரமிக்க தொடங்கியது ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி. 1772இல் ராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றிய கையோடு சிவகங்கைச் சீமை மீதும் போர் தொடுத்தனர். காளையார்கோவில் போரில் மன்னர் முத்துவடுகனாதர் வீரமரணமடைந்தார். அப்போது அவரது மனைவி வேலு நாச்சியாரும் தளபதிகள் மருது சகோதரர்களும் சிவகங்கைச் சீமையை விட்டு வெளியேறி திண்டுக்கல் அருகே தஞ்சமடைந்தனர்.

தஞ்சம் அடைந்த காலத்தில் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகளை உருவாக்கினர் மருது சகோதரர்கள். 1780ஆம் ஆண்டு திண்டுக்கல் கோட்டையில் இருந்து மாபெரும் புரட்சிப் படை சிவகங்கைச் சீமை நோக்கி சீறிப் பாய்ந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்களத்தில்தான் குயிலி என்கிற முதலாவது தற்கொலைப் படை போராளி வரலாற்றில் இடம்பெற்றார். சிவகங்கை அரண்மனையில் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கு மீது நெருப்புடன் பாய்ந்து ஒரு சரித்திரத்தைப் படைத்தார் குயிலி.

இந்தப் போரின் முடிவில் வேலு நாச்சியார் தலைமையிலான படை வென்றது. சிவகங்கைச் சீமையின் அரசியாக வேலு நாச்சியார், அமைச்சர்களாக பெரிய மருது, சின்ன மருது ஆகியோர் பதவி வகித்தனர். சில ஆண்டுகளில் வேலு நாச்சியார் ஓய்வு பெற்றுவிட 1790இல் சிவகங்கைச் சீமை மருது சகோதரர்கள் ஆட்சியின் கீழ் வருகிறது. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்கள் குறி வைத்திருந்தனர். இதனால் சின்ன மருதுவின் உதவியை கட்டபொம்மன் நாடினார். இதை உளவு பார்த்த ஆங்கிலேயர்களின் கோபம் மருது சகோதரர்கள் மீது திரும்பியது. 1799ஆம் ஆண்டு புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் உதவியுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். பின் 1799 அக்டோபர் 16இல் கயத்தாறில் கட்டபொம்மன் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்ட கொடுமை அரங்கேறியது.

கட்டபொம்மனின் சகோதரர்கள் ஊமைத்துரை உள்ளிட்டோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மருது சகோதரர்கள் உதவியுடன் ஊமைத்துரை 1801இல் பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பினார். மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி போர் நடைபெற, அதில் ஊமைத்துரை தோற்றுப் போகிறார். அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்தது மருது சகோதரர்கள்.இந்த நிகழ்வுக்குப் பிறகு மருது சகோதரர்களை எதிரிகளாகவே பார்த்தது.

சிவகங்கைச் சீமையில் மன்னர் வம்சாவளியின்படி மருது சகோதரர்கள் ஆட்சியாளர்கள் அல்லர்; அதனால் மருது சகோதரர்கள் ஆட்சிக்குக் கீழ்ப்படியத் தேவையில்லை என ஆங்கிலேய அதிகாரி அக்னியூ ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். இதற்குப் பதிலடியாகத்தான் திருச்சி மலைக்கோட்டையிலும் ஸ்ரீரங்கம் கோயில் வாசலிலும் மருது சகோதரர்கள் பிரகடனம் ஒன்றை வெளியிட்டனர். ஆங்கிலேயர்களை ஒழித்துக் கட்டுவதற்காக மக்களைத் திரட்டுகிற அந்தப் பிரகடனம் ஜம்புத் தீவுப் பிரகடனம் என வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது (12-6-1801). இந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக வெளியிடப்பட்ட முதலாவது விடுதலைப் போருக்கான பிரகடனம் இதுதான்.

ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்துவிட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக்கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்துவருகிறார்கள்.

உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரையொருவர் பழி தூற்றிக்கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்துவிட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆக வேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள்கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்ய வேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்குத் தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…

ஆதலால்… மீசை வைத்துக்கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது ராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்துவிட வேண்டும்…

இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்த பின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக்கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக்கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப் பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள்.

எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!… இதைப் படிப்பவர்களோ, கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்… இதுதான் அந்த ஜம்புத் தீவுப் பிரகடனம்.

இப்படி ஆங்கிலேயர்களை அழித்தொழிப்பது என்கிற சபதத்துடன் போர்க் களம் கண்டனர் மருது சகோதரர்கள். ஆங்கிலேயப் படைகளுடன் மரபுவழிப் போர், கெரில்லா போர் ஆகியவற்றுடன் ஆங்காங்கே கிளர்ச்சிகளை ஏற்படுத்தி ஆங்கிலேயர்கள் மீது மக்கள் திடீர் தாக்குதல் நடத்துவது எனப் பல யுக்திகள் இந்தக் களத்தில் பயன்படுத்தப்பட்டன. சிவகங்கைச் சீமையின் கிளர்ச்சி 1801ஆம் ஆண்டு ஜூலை 14இல் தொடங்கியது. ஆங்கிலேயர்களும் பெரும் படைகளுடன் சிவகங்கைச் சீமை நோக்கிப் படையெடுத்து வந்தனர். மொத்தம் 150 நாட்கள் உக்கிரமாக நடைபெற்றது இப்போர்.

ஆங்கிலேயர் படை பின்னடைவைச் சந்தித்த நேரங்களில் புதுக்கோட்டை மன்னரின் படைகள் வந்து உதவி அவர்களைக் காப்பாற்றின. திருப்பத்தூர், அரண்மனை சிறுவயல், கமுதிக்கோட்டைகளைத் தாண்டி ஆங்கிலேயர் படை முன்னேறியது. இலங்கையிலிருந்து தொண்டி கடல் வழியே மருது சகோதரர்கள் ஆயுத உதவியைப் பெற்றனர். மருது சகோதரர்கள் படைக்குத் தேவையான உணவு, ஆயுதங்கள் அனைத்தும் தொண்டி கடல் வழியே வந்து குவிந்துகொண்டிருந்தன. தொண்டி கடற்பகுதியில் 500க்கும் அதிகமான மருது படை வீரர்கள் முகாமிட்டு இப்பணியை மேற்கொண்டுவந்தனர். இதுவும் துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு மருது சகோதரர்களின் ஆயுதப் படகுகள் தகர்க்கப்பட்டன.

1801ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மருது சகோதரர்கள் படைக்கு அடுத்தடுத்த பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மருது சகோதரர்களின் குடும்பத்தினர் அடுத்தடுத்து ஆங்கிலேயப் படையினரால் கைது செய்யப்பட்டு, பலர் தூக்கிலிடப்பட்டனர். சோழபுரத்தில் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 19இல் மருது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதி விசாரணைகளை முறையாக நடத்தாமல் 1801 அக்டோபர் 24இல் திருப்பத்தூர் கோட்டையில் ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டனர்.அத்துடன் மருது சகோதரர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகள் 500க்கும் மேற்பட்டோரும் தூக்கிலிடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூரமும் அரங்கேறியது. மருது சகோதரர்களுக்குப் பக்க பலமாக இருந்த பலரும் கைது செய்யப்பட்டும் தூக்கிலிடப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் பெருந்துயரத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில் மருது சகோதரர்களின் நினைவு தினமான இன்று பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல்குமார் கூறுகையில், மாமன்னர் மருது பாண்டியரை தனது 500 வீரர்களுடன் 24-10-1801 தூக்கிலிட்டு, 72 தலைவர்களை வேல்ஸ் தீவிற்கு நாடு கடத்தினர் ஆங்கிலேயர். தமிழர்களின் புகழை மறைக்க உருவாக்கப்பட்ட திராவிடத்தை கைவிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 1801 திருப்பத்தூர்படுகொலை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.