திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும், தலைமைக் கழக பேச்சாளராகவும் இருந்து வருபவர் குடியாத்தம் குமரன். மேடைகளில் வேலூர் வட்டார வழக்கில் எதிர்க்கட்சிகளை கடுமையான விமர்சனம் செய்யும் குடியாத்தம் குமரன் சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு துரைமுருகனை குடியாத்தம் குமரன் விமர்சிப்பது போன்ற ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து துரைமுருகனிடம் மன்னிப்பு கோரியதோடு பல கட்டமாக போராடி மீண்டும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார். தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்த குடியாத்தம் குமரன் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வந்தார். பிரதமர் மோடி குறித்தும், அதிமுகவைச் சேர்ந்த நடிகை விந்தியா குறித்தும் குடியாத்தம் குமரன் பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பாக ‘எம்.பி கதிர் ஆனந்த் என் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார். துரைமுருகனும் கட்சியிலிருந்து என்னை நீக்கப் பார்க்கிறார். என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் குமரன். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்தே குடியாத்தம் குமரன் மீது மீண்டும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாகப் பேசிய குடியாத்தம் குமரன், என்னிடம் கட்சியினர் யாரும் பேசக் கூடாது என்றும் கதிர் ஆனந்த் கட்டளைபோட்டிருக்கிறார். நான் கதிர் ஆனந்த்தையே தொடர்புகொண்டு விளக்கம் கேட்டதற்கு உரிய பதில் சொல்லவில்லை. நான் மண்ணுக்குள் போகும்வரை தி.மு.க-வின் உடன்பிறப்புதான்.
இந்தக் கட்சிக்காகவும், தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதிக்காக என் உயிரையே கொடுப்பேன். அமைச்சர் துரைமுருகன், எம்.பி கதிர் ஆனந்த் இருவரும் ஏலகிரி மலை பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ பதிவுகளை வைத்திருக்கிறேன். “எனக்கும் துரைமுருகனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது மகன் கதிர் ஆனந்துதான் வேலூர் மாவட்டத்திலேயே பிரச்னையாக உள்ளார்.
மேலும், “தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் கட்சிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வரும் நிலையில், ஆனால் அமைச்சர் துரைமுருகன் குடும்பம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. மணல் விவகாரத்திற்கு அமைச்சர் துரைமுருகன் 60,000 கோடி சம்பாதித்துள்ளார். மிக விரைவில் அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன். என்னை செருப்பால் அடித்து விரட்டினாலும் திமுகவில்தான் இருப்பேன்.
மணல் விவகாரங்களில் நடந்த ஊழல் சம்பந்தமான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன். துரைமுருகனின் பல வீடியோக்கள், தொலைபேசி உரையாடல்கள் பதிவுகள் எனிடம் இருக்கிற்து. அவற்றையெல்லாம் நான் வெளியிட்டால் பத்து நிமிடத்தில் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இருக்காது” என்று குடியாத்தம் குமரன் ஆவேசமாகப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதேசமயம், எந்த நேரத்திலும் நானும் என் குடும்பத்தாரும் கைதுசெய்யப்படலாம்” என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.