திமுக முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ, மற்றும் எம்.பிகள் ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம்.!துரிதப்படுத்தபடும் விசாரணை.!

0
Follow on Google News

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் விரைவில் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறு செய்தியை, பொய்யான செய்தியை வெளியிட்டு, மலிவான விளம்பரத்தைத் தேடுகிறார்கள். எப்போதுமே திமுகவிற்கு இது கைவந்த கலை தானே. வேறு எந்தக் குற்றச்சாட்டும் அவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. எல்லாம் ஆதாரத்துடன் இருக்கிறது. எத்தனை முன்னாள் மந்திரிகள் மீது வழக்குகள் இருக்கிறது என்று தெரியுமா? அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் மறைப்பதற்குத்தான் அமைச்சர்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டை இன்றைக்கு கொண்டுபோய் அறிக்கை மூலமாக ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், ஏற்கனவே அம்மா இருக்கும்போது திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகளெல்லாம் விரைவாக நீதிமன்றத்திற்கு வர இருக்கிறது. அப்படி வருகின்றபோது இவர்கள் மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கின்ற காரணத்தால், முன்கூட்டியே கழக அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்துவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, ஒரு பொய்யான அறிக்கையை உருவாக்கி, எங்களது அரசின் மீது களங்கம் சுமத்துவது, அவதூறு செய்தி வெளியிடுவது, மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்குத் தான் இவ்வாறு செய்கிறார்.

ஐ.பெரியசாமி மீது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக 9 வழக்குகள் இருக்கின்றன. சுப தங்கவேலன் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த போது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு, கே.என்.நேரு சொத்துக்குவிப்பு வழக்கில் இருக்கிறார், அவர்களெல்லாம் சீக்கிரம் போய்விடுவார்கள், கவலைப்படாதீர்கள். அவர்களெல்லாம் அடுத்த தேர்தலில் இருப்பார்களா, இல்லையா என்று தெரியவில்லை. ஏனென்றால் M.L.A., M.P. மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் நீதிமன்றத்தில் நடக்கின்றது,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வானூர் எஸ்.ஆறுமுகம், என்.பெரியசாமி ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது சொத்துக் குவிப்பு வழக்கு, அசோகன், முன்னாள் அரசுப் பணியாளர் கையூட்டு பெற்ற வழக்கு, முன்னாள் அமைச்சர் அன்பரசன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ராஜன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, என்.கே.பி.ராஜா மீது சொத்துக் குவிப்பு வழக்கு,

முன்னாள் அமைச்சர் தமிழரசி மீது சொத்துக் குவிப்பு வழக்கு, கே.ஆர்.பெரியகருப்பன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, தங்கம் தென்னரசு மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ராஜு மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மீது சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கு,

முன்னாள் மதுரை மேயர் குழந்தைவேலு மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, மதுரை முன்னாள் மேயர் எம்.பாண்டியன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன.

இவ்வளவையும் வைத்துக்கொண்டு, கழக அரசு மீது ஊழல் என்கிறார். எந்த கழகத்தினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, சொல்லுங்கள். திமுக-வினரில் இவ்வளவு பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. விசாரணைக்கு வரவிருக்கின்றது.என தெரிவித்தார், மேலும் அதிமுக அரசு தான் இருக்கிறது, துரிதப்படுத்தியிருக்கலாமே? என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி முறையாகத் தான் வரமுடியும். நாம் ஒவ்வொரு முறையும் எடுத்துச் சொல்கிறோம்.

நீதிபதிகள் வாய்தா கொடுக்கிறார்கள். இப்போது உச்சநீதிமன்றமே முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி, இப்போது இருக்கும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்களை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றமே அமைத்து விட்டார்கள். இந்த வழக்குகளையெல்லாம் அதற்கு அனுப்பியிருக்கிறார்கள். விரைவாக வரும். அதனால்தான், இவர் முந்திக் கொண்டார். வழக்கு வந்தால் தினந்தோறும் அத்தனைபேரும் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு வந்தால் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி அதை காட்டிக் கொண்டிருப்பீர்கள். இதை மறைப்பதற்காக, கழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தவேண்டுமென்று, ஒரு பொய்யான அறிக்கையை தயார் செய்து கொடுத்திருக்கிறார். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.