பெருமைமிகு தமிழரா.? பெருமைமிகு கன்னடரா.? அண்ணாமலை குறித்த விமர்சனங்களுக்கு பேராசிரியர் பதிலடி..

0
Follow on Google News

பாஜக தலைவர் அண்ணாமலை தான் பெருமைமிகு கன்னடியன் என குறிப்பிட்டது குறித்து சமீபத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன். நமது தினசேவல் இணையதள செய்திக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து கூறியதாவது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி செயற்கையாக ஒரு பொய் வாதம் புனையப்படுகிறது.

அவர் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது நான் பெருமைமிகு கனடியன் என்று பேசியதாகவும், நீங்கள் கனடியன் தானே, தமிழர் இல்லையா.? என்று தமிழக ஊடகங்களும் சித்தரிக்கின்றன. தமிழக பாஜக மற்றும் அதன் தலைவர்கள் பற்றி உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பும் வேலைகளை தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள் செயல்பட்டு வருவது வழக்கம் தான், அதேபோன்று அண்ணாமலை விவகாரத்திலும் அதைத் தொடர்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் யார் தலைவராக வந்தாலும் இதை தான் செய்து வருவார்கள் என சுட்டி காட்டிய பேராசிரியர்.

மேலும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் சொந்த மாநிலங்கள் எதுவாக இருந்தாலும், அவர்கள் எந்த மாநிலத்தில் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்களோ, அந்த மாநிலத்தின் கேடர் என்று தான் அழைக்கப்படுகிறார்கள், உதாரணமாக தமிழ்நாட்டைச் சார்ந்த பல ஐஏஎஸ் அதிகாரிகள் பிற மாநிலங்களில் இருக்கின்றார்கள், தற்போது தமிழக தலைமைச் செயலாளராக இருக்கின்ற இறையன்பு அவர்களின் சகோதரர் குஜராத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிகிறார். அவர் குஜராத்தின் கேடர் என்றே அழைக்கப்படுவார். அதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகா கேடர் என்றே அழைக்கப்பட்டார்.

இதுபோன்று எந்த மாநிலத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரியாக பணி அமர்த்தப்படுகிறார்களோ அவர்கள் அந்த மண்ணையும் அந்த மக்களையும் நேசிப்பவர்களாக மாறுவார்கள், அந்த மண்ணை சொந்தம் கொண்டாடுவார்கள். அதேபோன்று அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றும் பொழுது அந்த மண்ணின் மக்களும் அந்த அதிகாரியை கொண்டாடுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது வெளி மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களில் தமிழ்நாட்டில் பல இடங்களில் தெரு பெயர்கள் ஊர் பெயர்களும் உண்டு.

இதுபோன்று ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அந்த மண்ணையும் அந்த மக்களையும் கொண்டாடுவார்கள், பதிலுக்கு அந்த மக்களும் இவர்களை கொண்டாடுவார்கள் இதுதான் இயற்கை. அதனால் தான் தமிழகத்தில் இதற்கு முன்பு காவல் துறை டிஜிபியாக இருந்த திரிபாதி ஓய்வு பெறும் பொழுது “ஒடிசாவில் பிறந்தாலும் எனக்கு தாய் வீடு தமிழகம்தான்” என்று குறிப்பிட்டார். திரிபாதி தமிழகம் எனது தாய் வீடு என்று சொன்னதால் அவருடைய சொந்த மாநில மக்கள் யாரும் கோபித்துக் கொள்ள வில்லை. அதேபோன்று அண்ணாமலை பெருமைமிகு கனடியன் என்று கூறும்போது எதற்காக இங்கே சிலர் அதை விமர்சனம் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பிய பேராசிரியர்.

எப்பொழுதுமே நான் தமிழனாகவே உணர்கிறேன் என்று உத்தரகண்டில் இருக்கும் தருண்விஜய் சொன்னபோது தமிழகத்தில் சேர்ந்த அனைவரும் அவரை கொண்டாடினார்கள், இதனால் உத்தரகண்ட் மக்கள் யாரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போன்று வெளிநாட்டில் பிறந்த ஐரோப்பிய கிறிஸ்துவ பாதிரியார்கள் ரசிகன் பால் ஐயர், வீரமா முனிவர், ,மற்றும் ராபர்ட் டி நொபிலி ஆகியோர் மதம் மாற்றுவதற்காக ஐரோப்பியாவில் இருந்து தமிழகம் வந்தவர்கள்.

ஆனாலும் இவர்கள் தமிழ் பற்று காரணமாக இவர்களை தமிழர் என்று கொண்டாட படுகின்றனர். வெளியில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தமிழையும் தமிழ் மக்களை கொண்டாடினால் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒரு தமிழர் கர்நாடகாவுக்கு சென்று மற்றொரு மாநில மக்களை கொண்டாடுவதை அந்த மண்ணை நேசிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் ஏன் இந்த முரண்பாடு.? என கேள்வி எழுப்பிய பேராசிரியர், மேலும் நம்மை பொறுத்தவரை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை “ஒரே மண் ஒரே பண்” இதில் ஒவ்வொரு இந்தியனும் நமக்கு சொந்தம் தான் அதில் தமிழன் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை.

தமிழனாக இருந்து கொண்டே இந்தியனாக இருக்கின்றேன் என்பதில்தான் ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கு ஆர்வமும் கூட, அண்ணாமலை தான் பெருமைமிகு கன்னடியன் என்று சொன்னது அவர் கனடாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த பொழுது அவர் அப்படிச் சொல்லியது தான் பாஜகவின் பெருமையும் கூட இதை நினைத்து தமிழக பாஜக பெருமை கொள்கிறது. இங்கே தமிழக பாஜக தலைவர் என்பதனால் அண்ணாமலை பெருமைமிகு தமிழன் என்று சொல்லிக் கொள்வதால் பாஜக கூடுதல் பெருமை அடைகிறது, இதை வைத்துக்கொண்டு மலிவு அரசியல் செய்யக்கூடாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.