வங்கி அதிகாரிகள் வரவழைப்பு… கோடி கணக்கில் பணம் பரிவர்த்தனை… கே என் நேரு வீட்டில் நடந்த விசாரணை…

0
Follow on Google News

திருச்சி தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டுக்கு காலை 6.45 மணியளவில், 5 கார்களில் துணை ராணுவ பாதுகாப்புப் படையினருடன் வந்த 10-க்கும் அதிகமான அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த போது, சட்டப்பேரவை நடைபெறுவதால் அமைச்சர் நேருவும், அவரது துணைவியாரும் சென்னையில் இருப்பதாக அமலாக்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதேபோல, கே என் நேரு மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவும் டெல்லியில் உள்ளார். வீட்டில் சமையலர் மற்றும் உதவியாளர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மட்டுமே இருப்பதை தெரிந்து கொண்ட அமலாக்க துறை அதிகாரிகள், திருச்சி பாரதி நகரில் வசிக்கும் நேருவின் மகள் ஹேமா, அவரது கணவர் ஆனந்த் ஆகியோரை அமலாக்கத் துறையினர் அழைத்து வந்து அமைச்சர் கே என் நேரு வீட்டில் சோதனையை தொடங்கினர்.

அப்போது, வீட்டில் இருந்தவர்களிடம் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்ட அமலாக்கத் துறையினர், வீட்டிலிருந்து யாரும் வெளியேறக் கூடாது என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் வந்த காரிலிருந்து ‘பிரின்டர்’, சூட்கேஸ் ஆகியவற்றை அடுத்தடுத்து வீட்டுக்குள் எடுத்துச் சென்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு கே என் நேரு தொடர்புடைய டிவிஹெச் ஹோம்ஸ் நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்றதில் மோசடி செய்திருப்பதாக எழுந்த புகாரின் பெயரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக இந்த விசாரணையில சட்ட விரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பதாக டிவிஹெச் ஹோம்ஸ் கட்டுமான நிறுவனம் மற்றும் மற்றொரு நிறுவனத்தில நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில 90 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் 500 கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தவில்லை என்ற தகவல் வெளியானது.

இதன் அடிப்படையில் தான் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் அருண் நேருவின் வீட்டில் ஏறத்தாழ 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை மாலை 5:30 மணி அளவில் சோதனை நிறைவு பெற்றதாக கூறப்பட்ட நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கே.என். நேரு குடும்பத்தினர் கணக்கு வைத்திருக்கும் இரு முக்கிய வங்கிகளை சேர்ந்த அதிகாரிகளை சோதனை நடைபெற்ற கே என் நேரு வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். கைப்பற்றிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டி விசாரணை நடத்திய அமலாக்க துறை அதிகாரிகள், பின்னர் முக்கிய ஆவணங்களை ஒரு வெள்ளைநிற பெட்டியில் வைத்து அமலாக்கத்துறையினர் காரில் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சோதனையின் போது பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து அமலாக்கத்துறை எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. இருந்தும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் இதுவரை சிக்கி இருப்பதாகவும், இருப்பினும் முழுமையான சோதனை நிறைவடந்த பின்னரே, எவ்வளவு ஆவணங்கள் மற்றும் எவ்வளவு கணக்கில் வராத பணம் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here