நேரம் குறித்த அண்ணாமலை … உடனே அந்தர் பல்டி அடித்த எடப்பாடி… அந்தரத்தில் தொங்கும் பரிதாபம்..

0
Follow on Google News

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து தற்பொழுது இவர்கள் இருவரின் பிரச்சனை நீதிமன்றம், மற்றும் தேர்தல் ஆணையம் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனால் உண்மையான அதிமுகவினர் யார் என்கின்ற குழப்பம் அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகளுக்கும் இருந்து வருகிறது.

மேலும் உண்மையான அதிமுக யார் என்பதை, தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் முடிவு செய்யட்டும் என அதிமுக உட்கட்சி விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரையும் சம அளவில் பார்த்து வருகிறது பாஜக உட்பட கூட்டணி கட்சிகள், இருவரையும் சம அளவில் பார்த்து வருவதில் ஓபிஎஸ்க்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் இதில் எடப்பாடி கூட்டணி கட்சிகளிடம் முரண்பட்டு வருகிறார்,

இன்னும் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவரில் யார் அதிமுகவை உரிமை கோரலாம் என இறுதி செய்யாத நிலையில், எடப்பாடி தலைமையை ஏற்று கொள்கின்ற கட்சியுடன் தான் கூட்டணி, ஓபிஎஸ் உடன் தொடர்பில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி தரப்பு தெரிவித்து வந்தது, மேலும் இதில் உச்சகட்ட காமெடியாக எடப்பாடி தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என எடப்பாடி தரப்பு தம்பட்டம் அடித்து வந்தது அரசியலில் பெரும் கேலி கூத்தாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நடைபெற இருக்கும் ஈரோடு இடைத்தேர்தலில், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இரண்டு தரப்புமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது, கூட்டணியில் இருந்த பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என ஒதுங்கி கொண்டது, ஓபிஎஸ் உட்பட பிற கட்சிகள் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கிறோம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளது, ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் தன்னுடையை நிலைப்பாட்டை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்நிலையில் மெகா கூட்டணி என காமெடி செய்து வந்த எடப்பாடி அணியில் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன் தவிர்த்து வெறும் யாரும் இடம்பெறவில்லை, இதனை தொடர்ந்து ஏற்கனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்து வந்த நிலையில், நேற்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஈரோடு தேர்தல் பணிமனை தொடர்பான பேனரில் அதிமுக தலைமையிலான, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என குறிப்பிட்டு இருந்திருந்தனர்.

இதில் முற்போக்கு என்கிற வார்த்தையை சேர்க்கப்பட்டு அந்த பேனரில் பாஜக தலைவர்கள் புகைப்படம் அச்சிடப்படவில்லை.மேலும் பாஜகவை எடப்பாடி வெளியேற்றிவிட்டார் என இந்த தகவல் வைரலான சில நிமிடங்களில், பாஜக தரப்பில் இருந்து எடப்பாடி அணியை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவருக்கு முக்கிய தகவல் ஓன்று சென்றதாக கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து முற்போக்கு என்ற வார்த்தை அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரிடப்பட்டிருந்தது.

அடுத்த சில மணி நேரங்களில் அங்கே இருந்த பேனர் முற்றிலும் அகற்றப்பட்டு, வெறும் புகைப்படம் மட்டும் உள்ள பேனர் வைக்கப்பட்டது.இந்நிலையில் அடுத்தடுத்து பேனர் விவகாரத்தில் எடப்பாடி அந்தர் பல்டி அடித்து சம்பவத்திற்கு பின்னணியில் பாஜகவின் அரசியல் என்ன என்கிற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் நீடித்து வரும் நிலையில், பேனர் விவகாரம் குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது.

தேசிய ஜனநாயக கூட்டணி என்பதை தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியாக மாற்றியது யாரோ அவர்களிடம் சென்று கேள்வி எழுப்புங்கள், ஆறு மணி நேரத்தில் எப்படி பேனர் மாறியதோ, அதே போன்று இன்னும் சில மாற்றங்கள் நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துவிட்டு கடந்து சென்றார் அண்ணாமலை, இந்நிலையில் பொறுத்திருந்து பாருங்க என அண்ணாமலை நேரம் குறித்துள்ளதால் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி அந்தர் பல்டி அடித்து பேனர் விவகாரத்தில் நடந்தது போன்று பல மாற்றங்கள் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.