கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் உள்ள எடப்பாடி அணியினருக்கும் பாஜகவிற்கும் இடையில் உரசல் உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் எடப்பாடி பழனிச்சாமியின் கொட்டத்தை அடக்கும் வகையில் அமைந்துள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவில் இரண்டு பிரிவுகளாக இருக்கும் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகிய இருவருமே தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
தேர்தல் தொடர்பாக இரண்டு தரப்பினரும் பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை சந்தித்து பேசி இருந்த நிலையில், இதுவரை யாருக்கும் வெளிப்படையாக தங்கள் ஆதரவை பாஜக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் எடப்பாடி தரப்பினர் அமைத்துள்ள ஈரோடு தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பாஜக தலைவர்கள் புகைப்படம் இல்லாமல்,சர்ச்சையை ஏற்படுத்தி பேனர் விவகாரத்தில் ஒரே நாளில் 3 பேனர்களை மாற்றி நிலையான முடிவு எடுக்க முடியாமல் தள்ளாடி வரும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் மிக பரிதாபமாக பார்க்கப்பட்டது.
இப்படி ஒரு பரபரப்பான அரசியல் சூழலில் திடீரென டெல்லி புறப்பட்ட அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், ஈரோட்டில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது எழுத்துப் பிழை என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் தன்னிடம் கூறியதாகவும், 6 மணி நேரத்தில் பேனரை மாற்றி உள்ளார்கள், அதுபோல் நாளை வரை காத்திருங்கள் என சூசகமான ஒரு தகவலை தெரிவித்து விட்டு டெல்லி புறப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை டெல்லியில் இருக்கும் பொழுதே அதிமுக எம்பி தம்பிதுரையை நேரில் அழைத்து நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் சுமார் 10 நிமிடங்கள் பிரதமர் மோடி தனியாக சந்தித்து தம்பிதுரையிடம் பேசியுள்ளார். அப்போது தமிழக அரசியலில் பாஜக மீது எடப்பாடி பிடித்து வரும் முரண்பாடு குறித்தும் பேசப்பட்டதாகவும், இது தொடர்ந்தால் பாஜக எடப்பாடியை கண்டு கொள்ளாமல் கை கழுவி விடுவோம், அதனால் இன்று மாலைக்குள் உங்கள் தரப்பு முடிவை டெல்லி பாஜக தலைமைக்கு தெரியப்படுத்துங்கள் என பிரதமர் தம்பிதுரையிடம் பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் பிரதமருடனான சந்திப்பு குறித்து டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு தகவல் அனுப்பியுள்ளார் தம்பிதுரை, உங்கள் முடிவை தெரிவியுங்கள் என்று மாலைக்குள் நான் டெல்லி பாஜக தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் தம்பிதுரை. இப்படி ஒரு இக்கட்டான சூழலில் எடப்பாடி சிக்கியிருக்க. இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், மேலும் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை, இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது இடைத்தேர்தல் நடத்தும் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது, அதனால் தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனால் ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்தவுடன் கூட்டணி கட்சிகள் அனைவரும் பாஜக பின் அணிவகுக்க ஜி.கே.வாசன் போன்ற அரசியலில் காலாவதியான தலைவர்கள் மட்டும் எடப்பாடி பக்கம் நிற்கிறார்கள், இந்த சூழலில் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளும் எடப்பாடிக்கு சாதகமாக இல்லை. இப்படி ஒரு அபாயகரமான சூழலில் பாஜக சொல்வது போல் சில விஷயங்களை கேட்காமல் முரண்பட்டால், மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி.
டெல்லியில் இருந்த தம்பிதுரை மூலம் பாஜக சொல்வதை கேட்கிறேன் என டெல்லி பாஜக தலைமைக்கு தகவல் அனுப்பி சரணடைந்ததாக டெல்லி வட்டாரங்கள் கூறப்படுகிறது. இதன் பின்பு தான், டெல்லி பாஜக தலைமையின் ஆலோசனையின் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை அண்ணாமலை நேரில் சந்தித்து சில நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாஜகவை துணிந்து எதிர்த்து, ஒரு கை பார்த்து விடுவோம் என்று களத்தில் இறங்கி ஓவர் ஆட்டம் போட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது பாஜகவிடம் சரண்டராகி உள்ளது பின்னனியில் அண்ணாமலையில் அரசியல் நகர்வுகள் தான் காரணம் என்றும்,அந்த வகையில் எடப்பாடி விவகாரத்தில் அண்ணாமலை மெகா சிக்சார் அடித்து விட்டார் என்கிற மகிழ்ச்சியில் உள்ளதாம் டெல்லி பாஜக தலைமை.