இந்தியாவில் ஆன்மீக புண்ணிய தலத்தில் முக்கியமாக பார்க்கப்படுவது காசி மற்றும் ராமேஸ்வரம். 2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி மற்றும் வதோரா என இரண்டு தொகுதிகளில் குஜராத் முதல்வராக இருந்த மோடி போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்று பிரதமரானார். 2019 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக அமர்ந்தார் மோடி.
இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், அதில் ஒரு தொகுதி வாரணாசி, மற்றொன்ற தொகுதி தென் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பாஜக டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. தென் இந்தியாவில் கர்நாடகா, புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக வலுவான வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தென் இந்தியாவில் ஒரு தொகுதியில் போட்டியிட டெல்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஆன்மீக தலமான காசி எண்ணும்போதே ராமேஸ்வரம் என்பது தானாக சேர்ந்து கொள்ளும். அதே போன்று ராமேஸ்வரம் என்னும்போது காசியும் தானாக சேர்ந்து விடும், அந்த வகையில் காசி – ராமேஸ்வரம் இரண்டையும் பிரிக்க முடியாது, காசி அமைந்துள்ள வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுவது போன்று ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது .
இந்த நிலையில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 3,42,000 வாக்குகள் பெற்று சுமார் 32 சதவீத வாக்குகளை பெற்று, 11 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது பாஜக. அதேபோன்று கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைத்து தனியாக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குப்புராம் பெற்ற வாக்கு 1,71,000 வாக்குகள் பெற்று 17 சதவீத வாக்குகளை பெற்றது பாஜக.
பாஜக வளர்ச்சி அடைந்த மாவட்டங்களில் ராமநாதபுரம் ஒன்று. கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகளால் கட்டியமைக்கப்பட்ட மோடி எதிர்ப்பு, பாஜக எதிப்பு என்கிற பிம்பம் தற்பொழுது மக்கள் மத்தியில் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் ராமநாதபுரத்தில் நேரடியாக போட்டியிடும் பொழுது, அந்த தொகுதி கூடுதல் முக்கியத்துவம் பெரும். மக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடியை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என கருதுகிறது டெல்லி பாஜக தலைமை.
இந்த நிலையில் டெல்லி பாஜக தலைமை ஒரு ஸ்பெஷல் டீம் ஒன்றை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இறக்கியுள்ளது, இந்த தொகுதியில் மக்களின் அடிப்படை வசதி என்ன தேவைப்படுகிறது, வரட்சி மாவட்டமான ராமநாதபுரம் தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் கொண்டு வரலாம், புண்ணிய தலமான ராமேஸ்வரத்தை வாரணாசி காசிக்கு இணையாக எப்படி பிரம்மாண்டமாக வடிவமைப்பது போன்ற தகவல்களை அந்த ஸ்பெஷல் டீம் ஆராய்ந்து வருகிறது என்கிறது பாஜக வட்டாரங்கள்.
அதே நேரத்தில் வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் அண்ணாமலை தொடங்க இருக்கும் பாதை யாத்திரை, ஒன்றரை வருடம் நடைபெற இருக்கிறது, அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெறும் போது, இராமநாதபுரம் தொகுதியில் உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகிறது. ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கான தேர்தல் பணியின் தொடக்கம் தான் அவர் பசும்பொன் வருவது என கூறப்படுகிறது.